இலங்கை ISIS பயங்கரவாதி மரணம் ! இலங்கை முஸ்லிம்களுக்கு அபாய எச்சரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, July 14, 2015

இலங்கை ISIS பயங்கரவாதி மரணம் ! இலங்கை முஸ்லிம்களுக்கு அபாய எச்சரிக்கை(jw)

இலங்கையின் ISIS  / பயங்கரவாதி மரணம் தொடர்பான செய்தி அரசால் புரசலாக கசிந்துள்ள நிலையில், குறித்த நபரின் ஊருக்கு இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ள செய்தி உறுதி செய்யப்பட்டு மிகுந்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


இது இலங்கை முஸ்லிம்களுக்கு மிகவும் ஒரு அபாய எச்சரிக்கை ஆகும். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு இளைஞன் சிரியா வரை சென்று தன்னையே தியாகம் செய்கின்றான் என்னும் பொழுது, இது இயல்பாக நடக்கமுடியாத ஒன்றாகும்.

இப்படி செய்தது ஒன்றும் தெரியாத இரத்தம் கொத்திக்கும் டீனேஜ் இளைஞன் அல்ல. 7 குழந்தைகளின் தந்தை இப்படி செய்தால், இதற்கு பயங்கரமான பின்னணி இருக்க வேண்டும். இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள் என்று சொல்லி பிரச்சாரம் செய்யும் எதோ ஒரு இயக்கம் இதன் பின்னணியில் இருக்க வேண்டும். இப்படியான நயவஞ்சகத் தனமாக அடுத்தவர்களின் பிள்ளைகளை உசுப்பேற்றி பலி கொடுக்கும் இயக்கங்களின் செயல், நாளை இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழவே முடியாத சூழலை உருவாக்கலாம்.

இவர் ஒரு கல்வியறிவற்ற முட்டாள்தனமான நபர் அல்ல, இவரின் தந்தை, பாட்டன் ஆகியோரும் சட்டத்தரணிகள், இவரும் ஒரு சட்டத்தரணி, அது மட்டுமல்ல கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தும் இருக்கின்றார். இவர் மடத்தனத்தால் ISIS ஐயும், மரணத்தையும் தெரிவு செய்திருக்க முடியாது. இலங்கையில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்கின்றோம் என்று செயல்படும் இயக்கம் ஏதாவது இதன் பின்னியில் இருக்கவே வேண்டும். இதனை ஊகிப்பது பெரிய கஷ்டமான விடயம் அல்ல. நாம் இப்பொழுதே விழித்துக் கொள்ளாவிடின் நாமும் அழிந்து போகலாம், பல முஸ்லிம் கிராமங்கள் இலங்கை வரைபடத்தில் இருந்தே இல்லாமல் ஆக்கப்படலாம்.

இஸ்லாமிய ஆட்சி, கிலாபா, ஜிஹாத், சஹீத், அல்லாஹ்வின் பாதையில் மரணம் என்றெல்லாம் உணர்வூட்டி, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாத சிந்தனைகளும், இந்த நாட்டிற்கு பொருத்தமற்ற கொள்கைகளும் விதைக்கபடாவிட்டால், இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்காது.

இது ஒரு மரணம் தான் நமக்கு தகவல் கிடைத்துள்ளது, இன்னும் எத்தனை பேர் பயங்கரவாதிகளாக உள்ளனர் என்று முழுமையாக தெரியவில்லை. இப்பொழுதே விழித்துக் கொள்ளவிட்டால் முஸ்லிம் என்றாலே நாட்டிற்கு அச்சுறுத்தல் என்கின்ற நிலையில் பார்க்கப்படலாம்.

மொத்த இலங்கை முஸ்லிம்களின் அமைதியான வாழ்க்கை, இந்த நாட்டின் பொது அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பொருத்தமற்ற கொள்கைகளை போதிக்கும், இப்படியான பயங்கரவாதிகள் உருவாக மறைமுகமாக துணைபோகும் இயக்கங்களை தடை செய்ய முஸ்லிம்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தீவிரவாதக் கருத்துகளை மறைமுகமாகவோ, பகிரங்கமாகவோ பிரச்சாரம் செய்யும் மவ்லவிகள், இயக்கங்கள் குறித்து முஸ்லிம்கள் உரிய தகவல்களை அரசுக்கு வழங்காவிடில், எதிர் காலத்தில் இந்த நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும்.

வயிற்ருக்குள் தேவையில்லாத ஒரு கட்டி வளர்ந்தால், டாக்டரிடம் சென்று ஒபரேசன் மூலம் வயிற்ரை வெட்டி கட்டியை அகற்றினால்தான் நோயாளி பிழைக்க முடியும். கட்டி நமது உடலுக்கு உள்ளே இருக்கின்றது, ஆகவே உடலுக்கு சொந்தமானது, கட்டி உடலுடன் சேர்ந்து வளர்கின்றது என்று கட்டிக்கு இறக்கம் காட்டினால், அது வளர்ந்து வெடித்து அந்த நபரையே மரணிக்க வைத்துவிடும். இதுபோலவே இலங்கைக்கு தேவையில்லாத இஸ்லாமிய இயக்கங்கள், மவ்லவிமார், கொள்கைகளை அகற்ற வேண்டும், அதனை பாதுகாப்புப் பிரிவு என்கின்ற டாக்டரிடம் சென்று ஒபரேசன் செய்துகொள்ளத்தான் வேண்டும் என்றால், அதனை செய்யத்தான் வேண்டும்.

இஸ்லாம் சாந்தியினதும், அமைதியினதும் மார்க்கம். முஸ்லிம்கள் மத்தியில், சிறுவர்கள், மாணவர்கள் மத்தியில் தீவிரவாத, பயங்கரவாத, அடிப்படைவாத கருத்துக்களை விதைக்கும் அனைவரையும் புறக்கணிப்போம், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம், இல்லை என்றால், ஒரு நாளில் நாம் இருந்த இடம் தெரியாமல் போகலாம். புலிகள் இயக்கத்தால் தமிழர்கள் பட்ட துன்பங்களை நாம் பாடமாக கற்றுக் கொள்வோம்.


- அபூ அம்மார்

No comments:

Post Top Ad