பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் தொடர்பாடலை ஏற்படுத்தினால் போதைப்பொருள் கட்டுப்பாடு சாத்தியம் ! சகலமதத் தலைவர்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 13, 2015

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் தொடர்பாடலை ஏற்படுத்தினால் போதைப்பொருள் கட்டுப்பாடு சாத்தியம் ! சகலமதத் தலைவர்கள்


வடமாகாணத்தில் மதுபானம் புகைத்தல் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் 2015ம் ஆண்டு 4.5 மில்லியன் லீற்றர் மதுபானத்தை வடமாகாண மக்கள் நுகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் புகைத்தல் பாவனையில் 42.9 வீதமாக இலங்கையின் 25 மாவட்டங்களில் முதலாமிடத்தில் இருக்கும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் இருக்கின்றது.
இந்நிலையில் போதைப் பொருட்கள், மதுபானம், புகைத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.
பாடசாலைகளிலும், இளைஞர்கள் மத்தியிலும் விழிப்பு ணர்வை வளர்ப்பதன் ஊடாகவும், பொதுமக்களுக்கும் பொலிஸர்ருக்கும் இடையில் தொடர்பாடலை வளர்ப்பதன் ஊடாகவுமே வடக்கில் போதைப்பொருள் கட்டுப்பாடு சாத்தியம்.
மேற்கண்டவாறு நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தாடல் நிகழ்வில் மத தலைவர்கள், பொலிஸார் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் மாதத்தை ஒட்டியதாக குறித்த கருத்தாடல் நிகழ்வு நடைபெற்றது.
இநநிகழ்வில் புனித சவேரியர் குருத்துவ கல்லூரியின் விரிவுரையாளர் அருள்திரு வி.ரவிராஜ் கருத்து தெரிவிக்கையில்,
2009ம் ஆண்டுக்கு முன்னர் யுத்தத்தின் சத்தம் என பேசிக் கொண்டிருந்த நாம் இன்று சத்தமில்லா யுத்தம் என பேசிக்கொண்டிருக்கிறோம். ஆம் உண்மையில் சத்தமில்லா யுத்தமே இப்போது நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் லீற்றர் மதுபானத்தை நாம் அருந்துகின்றோம். 2002ம் ஆண்டு 1 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்திய நாம் 2013ம் ஆண்டு 2மில்லியன் லீற்றர் மதுபானத்தையும், 2015ம் ஆண்டில் 4.5மில்லியன் லீற்றர் மதுபானத்தை அருந்துகிறோம்.
எங்கள் சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? 2007ம் ஆண்டு 29 வீதமாக இருந்த மதுபான விற்பனை அனுமதி தற்போது 81 வீதமாக மாறியிருக்கின்றது.
எனவே இந்த அனுமதிகளை யார் கொடுக்கிறார்கள்? திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், போர் நடைபெற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நான் மேலே குறிப்பிட்ட சத்தமில்லாத யுத்தம் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
இதேவேளை மதுபானம் மற்றம் புகைத்தல் பாவனை தொடர்பில் எஸ்.கௌதமன் விளக்கமளிக்கையில்,
இலங்கையில் மதுபானம் அருந்துவோரில் 14 தொடக்கம் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் 57.9 வீதமாக உள்ளார்கள். புகைத்தல் பாவனையில் இலங்கையின் 25 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் 42.9 வீதமாக முதல் நிலையில், உள்ளது.
இந்நிலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் மாங்குளம் பொலிஸ் நிலையம், வடமாகாண புகைரத பாதை அமைப்பு ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கியது.
மேலும் வடகிழக்கில் புகைப்பொருள் விற்பனை திறந்துவிடப்பட்டதன் பின்னர் புகைப்பொருள் விற்பனை நிறுவனம் வழங்கிய ஊடக பேட்டி ஒன்றில் 9.48 வீதம் தமக்கு, வருமானம் அதிகரித்துள்ளதாகவும், 7.22வீதமாக தங்கள் பங்குகள் விலை உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது.
இந்நிலையில் பல பக்கங்களிலிருந்து பல்வேறு சக்திகளுடன் போதைப்பொருள் மற்றும் மதுபான எதிர்ப்புக்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை சபையில் பேசிய மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,
போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எனவும் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தில் பொலிஸார், மக்கள், அரசாங்க அதிகாரிகள் தமக்கிடையில் இரகசியமான ஒரு தொடர் பாடசாலை வளர்ப்பதன் ஊடாக குற்றவாளிகளை அடையாளப்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவநேசன் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயற்றிட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். மேலதிகமாக உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்தல்களையும் நாம் மேற்கொள்கிறோம்.
மேலதிகமாக சில சந்தர்ப்பங்களில் பாடசாலை மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுகின்றார்கள். இது முறையற்ற ஒன்றாகும்.
தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தண்டிக்கப்படுவதற்கும் ஒரு முறை இருக்கின்றது. எனவே இவ் வாறன நிலமைகளின்போது அது தொடர்பில் எமக்கு தெரியப்படுத்தலாம்.
மேலும் பருத்தித்துறை, இளவாலை, மாதகல் பகுதிகளில் பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் நடத்தப் படுவதன் ஊடாக கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
அனேமான குற்றங்களுக்கு மதுபானமே அடிப்படையாக இருந்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகளை எமது புலனாய்வாளர்களின் ஒத்துழைப்புடனேயே கைது செய்கின்றோம். எனவே பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கேட்டுக்கொண்டார்.
தென்னாபிரிக்காவிலிருந்து வந்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் போருக்கு பின்னர் எந்தவொரு சமூகமும் இரு வழிகளை தேர்ந்தெடுக்கும். அதில் ஒன்று சமய வழி, மற்றைய வழி மதுபானம், போதைப்பொருள்கள் கொண்ட வழியாகும். இதில் நாம், இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
இந்நிலையில் மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையினை குறைக்குமாறு பலர் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
குறிப்பாக அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார். இதேவேளை கருத்தாடலில் கலந்து கொண்ட சமய தலைவர்கள், இளைஞர்களை சமய வழியில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.No comments:

Post Top Ad