கட்சிகளின் வேட்பு மனு கையளிப்பு (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 10, 2015

கட்சிகளின் வேட்பு மனு கையளிப்பு (வீடியோ இணைப்பு)ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஜே.வி.பி.  மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் வேட்பு மனுக்களை கையளித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில், போட்டியிடுவதற்காக அமைச்சர் அகில காரியவாசம் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வேட்பு மனுவை கையளித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதுளை மாவட்டத்திற்கான வேட்பு மனு இன்று எதிர்கட்சித் தலைவர் நிமால் சிரிபால டீ சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ள பலர் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு பத்திரங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இது தொடர்பான நிகழ்வு மகாவலி கேந்திரத்தில் இடம்பெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்காக சபாநாயகர் சமல் ராஜபக்ச தமது வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார்.

இது தவிர, சுதந்திர கூட்டமைப்பின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

இதேவேளை, ஜே.பி.பி. களுத்துறை, புத்தளம், வவுனியா, பொலநறுவை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை இன்று கையளித்துள்ளது.

ஜனநாயக கட்சி களுத்துறை, குருநாகல், கண்டி, மாத்தளை, ரத்தினபுரி, கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை பாரப்படுத்தியுள்ளது.


எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு இன்று கையெழுத்திட்டது.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேஷன் ஆகியோர் ஸ்ரீகொத்தாவில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனு பத்திரத்தில் இன்று பிற்பகல் கைச்சாத்திட்டுள்ளார்.

இதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று, யாழ்ப்பாணம், திருகோணமலை, வன்னி மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.

இதனிடையே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதற்கு நல்லாட்சிக்கான தேசிய இயக்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை, திருகோணமலை, புத்தளம், களுத்துறை, குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பொது தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை கையளித்தது.
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட் கிழமை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை கையளிக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜளநாயக கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.


No comments:

Post Top Ad