முஸ்லிம் சமூகத்திற்கான தேர்தல் தொடர்பான சில ஆலோசனைகள்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 09, 2015

முஸ்லிம் சமூகத்திற்கான தேர்தல் தொடர்பான சில ஆலோசனைகள்!


(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
இறைவனின் நாட்டப்படி எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பொதுத் தேர்தல் இடம் பெறவுள்ளது, கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று இந்த நாடும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் எதிர் கொள்கின்ற அதி முக்கியமான தேர்தலாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் அரசியலை தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு தெளிவான அடிப்படைகளில் உள்வாங்கச் செய்து மிகவும் சமயோசிதமாகவும், சாணக்கியமாகவும் முற்போக்கு தேசிய சக்திகளுடன் இணைந்து நாம் களமிறங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
முஸ்லிம்கள் உற்பட சிறுபான்மை சமூகங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்வாங்கப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் களத்தில் தீவிரமாக குதிக்கும் சாத்தியப் பாடுகள் காணப்படுகின்றன, சிலவேளைகளில் கள நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம், மூன்றாவது சக்தியாக ஜே வீ பீ யும் களத்தில் இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசியலில் இருந்து கொண்டு பிரதான எதிரனியினை கரசராமாக விமர்சிப்பதுவும் குறிப்பாக முன்னாள் அதிபரை மேடைகளில் அளவுகடந்து திட்டித் தீர்ப்பதும் நாட்டின் பிரதான் அரசியல் நீரோட்டத்தில் இனவாத மதவாத சக்திகளின் செல்வாக்கை நிறுவனமயப்படுத்தி அதிகரிக்கச் செய்துவிடும் என்பதனை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது மீள் அரசியல் பிரவேசம் குறித்து வெளியிடப்படும் விமர்சனங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான காழ்ப்புணர்வை பேரின சக்திகள் அரசியல் ரீதியாக நிறுவனமயப்படுத்தி மீள்கட்டுமானம் செய்வதற்கு உந்துதலாக இருந்து விடக் கூடாது.
கசப்பானதும் இனிப்பானதுமான கடந்தகாலங்கள் எல்லாத் தரப்பினருடனும் எமக்கு இருந்திருக்கின்றன, அவர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டவையும், நாம் அவர்களிடம் கற்றுக் கொண்டவையும் அதிகமதிகம் இருக்கின்றன.
அந்த வகையில் அந்தத் தரப்பில் இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளை தலைவர்களை விமர்சிப்பதிலும் நாம் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும், ஜனாதிபதி மைத்ரி அவர்கள் மீதுள்ள நம்பிக்கையை மென்மேலும் கட்டி எழுப்புவதனை விட்டு விட்டு அவர் மனதிலும் முஸ்லிம் சமூகம் சார்ந்த தப்பபிப்பிராயங்களை நாம் ஏற்படுத்துதல் ஆரோக்கியமான நடவடிக்கையாக இருக்காது, களநிலை யதார்த்தங்களை மீறி அற்புதங்கள் நிகழ்த்த வேண்டும் என தலைவர்களிடம் நாம் முழுமையான விசுவாசம் கொள்ள முடியாது.
இம்முறை பிரதான இடது சாரிக் கட்சியான ஜே வீ பீ யினருக்கும் சிறுபான்மைசமூகங்கள் மத்தியில் ஒரு ஆதரவுத் தளம் உருவாகியுள்ளதாக அவதானிக்க முடிகின்றது, அந்த வகையில் நாட்டின் பிரதான் அரசியல் நீரோட்டத்தில் தனித்தனியாகவும் கூட்டாகவும் களமிறங்கியுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் தேசிய மட்டும் சமுதாய கூட்டுப் பொறுப்புடன் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளுதல் வேண்டும்.
கிழக்கு மாகாணம் தவிர்த்து ஏனைய பிரதேசங்களில் பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் மக்கள் மாவட்ட ரீதயில் தமது விருப்பு வாக்கை தமது சமூகம் சார்ந்த ஒருவருக்கு அல்லது இருவருக்கு வழங்கினாலும் தத்தமது தேர்தல் தொகுதியில் தாம் சார்ந்த கட்சில் இருக்கும் பிரதான அமைப்பாளர் அல்லது வேட்பாளர்களுக்கும் தமது ஆதரவையும் விருப்பு வாக்கில் ஒன்றையும் வழங்குவதற்கான தெளிவான நிலைப்பாடுகளை எடுத்து அவர்களுடன் தேர்தல் பணிகளில் இணைந்து ஈடுபடல் வேண்டும்.
கட்சி அரசியலை சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் ஒன்றாக அன்றி சகல தரப்புக்களிலும் இருக்கும் ஆதரவாளர்களுடைய நடவடிக்கைகள் மூலம் சமூகத்தின் இருப்பை , பாதுகாப்பை, உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும், அடுத்த சமூகங்களுடனான நல்லுறவை திட்டமிட்ட அடிப்படையில் கட்டி வளர்ப்பதற்கும் அரியதொரு சந்தர்ப்பமாக நாம் பார்க்க வேண்டும்.
பெரும்பான்மை சமூகம் சார்ந்த வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களுக்குள் வரும் பொழுது உயரிய பண்பாடுகளை கடைப்பிடித்து அவர்களை கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனுசரித்து உபசரித்து முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியத்தையும் அபிமானத்தையும் அவர்கள் மனதில் பதியச் செய்தல் வேண்டும்.
தேசிய அரசியலில் மூஸ்லீம் பிரதிநிதித்துவங்கள் தக்க வைக்கப்படுவது எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோன்றே தத்தமது பிரதேசங்களில் தொகுதிகளில் உள்ள பெரும்பான்மை சமூக வேட்பாளர்கள் அமைப்பாளர்களுடனான நல்லுறவும் ஆதரவும் முஸ்லிம்களுக்கு மிக மிக முக்கியமாகும்!
முஸ்லிம் பிரதேசங்களில் வேட்பாளர்களின் போஸ்டர்களை கிழித்தல், கட் அவுட்களை சேதப்படுத்தல், பிணக்குகளில் வாக்குவாதங்களில் ஈடுபடல்அடிதடிகள், அடாவடிததனங்களை அரங்கேற்றுதல் என்பவற்றை முற்று முழுதாக தவிர்ந்து கொண்டு அரசியல் வேடுபாடுகளுக்கு மத்தியிலும் எங்களுக்குள் பரஸ்பர இணக்கப்பாடுகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் பெரும்பான்மை சமூகங்களுடன் மிகவும் அந்நியோன்யமாகவும், புரிந்துணர்வுடனும் செயற்படுகின்ற சந்தர்ப்பங்கள் எங்களுக்கு அதிகம் கிடைக்கின்றனம் அத்தகைய சந்தர்ப்பங்களை அரிய சந்தர்ப்பங்களாக நான் கருதி எமது சமாதான சகவழ்விற்கான அடித்தளங்களை ஆழமாக இட்டுக் கொள்ள முடியம், அப்பொழுதான் குறுகிய இன மத வாத சக்திகள் தேசிய அளவில் ஓரங்கட்டப் படுவார்கள்.
ஹாலால் முதல் அளுத்கமை வரை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட காழ்ப்புணர்வுப் பிரச்சாரங்கள், அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் அததனைகும்ம் பின்னால் பாரிய உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் இராஜதந்திர, இராணுவ பின்புலங்கள் இருந்ததனை நாம் அவ்வப்போது சுட்டிக் கட்டினோம், நல்லாட்சி மாற்றத்துடன் அவை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் நீறு பூத்த நெருப்பாக இருப்பதனையும் அவ்வப்போது அதன் கோர முகத்தை வெளிக்கட்டுவதனையும் நாம் அறியாமல் இல்லை.
எது எப்படிப்போனாலும் பேரினவாத மதவாத சக்திகள் நாட்டில் தொடர்ந்தும் இருக்கத்தான் போகிறார்கள், நாட்டில் யார் ஆட்சி செய்யப்ப போகிறார்கள் என்பதனை விட எத்தகைய ஆட்சிமுறை நிலவப்போகிறது என்பதில் தான் சிறுபான்மையினர் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
இனவாத மதவாத சக்திகள் எந்த தரப்பில் இருக்கின்றார்கள் என்பதனை விட குறிப்பிட்ட தரப்புக்கள்  அத்தகைய சக்திகளை எவ்வாறு கடந்த காலங்களில் கையாண்டார்கள், எதிர்காலத்தில் கையாள்வார்கள் என்பதிலேயே நாம் அவதானமாக இருக்க வேண்டும். அம்பையும் ஈட்டியையும் யார் யார் எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்பதே எம்முன்னுள்ள பிரதான கேள்வியாகும்.
அரசியல் எதிரிகள் ஒழிந்துவிட வேண்டும் என்று எந்த ஒரு சமூகமும் எதிர்பார்க்க முடியாது, ஆனால் எல்லா கள நிலவரங்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளில் ஆரோக்கியமான அரசியல் நகர்வுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான சவால்களை இன ரீதியாகவோ, மத ரீதியாகவோ, பிரதேச ரீதியாகவோ , மொழி ரீதியாகவோ நாம் அணுகாது, தேசத்தில் உள்ள சகல முற்போக்கு தேசிய சக்திகளுடனும் இணைந்து அவற்றை தேசிய பாதுகாப்பிற்கும், சமாதான சகவாழ்விற்கும், இனங்களுக்கிடையிலான, நல்லிணக்கத்திற்கும், தேசத்தின் ஸ்திரத் தன்மைக்கும், அபிவிருத்தியிற்கும் விடுக்கப்படும் சவால்களாக நாம் எதிர்கொள்ளல் வேண்டும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் எல்லா இக்கட்டான சந்தர்ப்பங்களிலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அரசியல் சதுரங்கத்தில் பகடைக்கைகளாக அல்லது பலிக்கடாக்களாக மாற்றிவிடுவதில் தேசிய பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் கவனமாய் காய் நகர்த்தியிருக்கின்றன.அதற்கான களநிலவரங்களும் கனகட்சிதமாய் தூபமிடப்பட்டு ஏற்படுத்தப் பட்டுமுள்ளன, பின்புலத்தில் இருந்து முஸ்லிம் அரசியல் வாதிகளை பொம்மலாட்டம் ஆடச் செய்து, அல்லது முஸ்லிம் சமூகத்தை சீண்டிப் பார்த்து அரசியல் இராஜதந்திர இலக்குகளை அடைந்து கொள்வதில் காலத்திற்குக் காலம் மேற்படி தரப்புக்கள் வெற்றிகண்டுமுள்ளன.
இந்த நாட்டின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்தியிற்கும் முஸ்லிம்கள் செய்த வரலாற்றுப் பங்களிப்புக்கள் மகத்தானவை, கொடுத்துள்ள விலையும் மதிக்க முடியாதவை, சர்வதேச பிராந்திய சக்திகளின் தேவைக்காக உழைக்கும் கூலிப்படைகளை, அரசியல் இராஜ தந்திர சதுரங்கத்தில் முஸ்லிம்களை பகடைக் காய்களாக பாவிக்க விரும்புகின்ற சக்திகளை முறியடிப்பதில் நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்ற முஸ்லிம்கள் காட்டு தர்பார் நடத்த விரும்புகின்ற எந்த சக்தியிற்கும் அஞ்சி வாழப் போவதில்லை, ஜனநாயக மரபுகளை மதிக்கும் முஸ்லிம் சமூகம் எந்த வொரு நெருக்கடியான  கால கட்டத்திலும் வன்முறையை நாடியதுமில்லை, இனியும் அதற்கான தேவை  எமக்கு இல்லை, இந்த நாட்டில் உண்மையான ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற சக்திகளுடனும்  கைகோர்த்து குறுக்கு வழியில் கோலோச்ச விரும்புகின்ற சக்திகளை தோற்கடிப்போம் இன்ஷா அல்லாஹ்.
போராட்டமாய் கிளர்ந்தெழுந்து, சூதட்டாமாய் பரிணாமம் கண்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயைப் பிடியென சரணாகதியடைந்த நம் தனித்துவத் தாரகைகள் கொண்டுவந்த சாதனைகளை விட சோதனைகளே நம்மை பெரிதும் நட்டாற்றில் தவிக்க விட்டன – அங்கும் நிறையவே எமக்கு கசப்பான பாடங்கள் இருக்கின்றன.
தெளிவான தேசிய சமூக பார்வையும்,கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்.

No comments:

Post Top Ad