இடிபாடுகளிலிருந்து 82 மணி நேரங்களின் பின் உயிரோடு மீட்கப்பட்ட நேபாள இளைஞர் இப்படி கூறுகிறார் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, May 01, 2015

இடிபாடுகளிலிருந்து 82 மணி நேரங்களின் பின் உயிரோடு மீட்கப்பட்ட நேபாள இளைஞர் இப்படி கூறுகிறார் (படங்கள் இணைப்பு)


நேபாள நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 82 மணி நேரத்துக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்த போது அவர் தனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்ததாக தெரிவித்தார். 
கடந்த சனிக்கிழமை நேபாள நாட்டின் காத்மண்டு மாவட்டத்தை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவான இந்த நில நடுக்கத்திற்கு நேபாளத்தில் இதுவரை 5500ற்கு மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான நேபாளத்தில் நேற்று முதல் 3 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காத்மாண்டு நகரில் 4வது நாளாக நேற்று மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்தது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து நேபாளம் வந்துள்ள மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் காத்மாண்டு நகரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தெருக்களை சுத்தம் செய்யும் பணியை நேற்று தொடங்கினர்.
எனினும் பல கிராமங்களில் மக்கள் நில நடுக்கத்திற்கு பின்பு திறந்தவெளியில் வசிப்பதால் அவர்கள் எந்த நேரமும் மரண பீதியுடன்தான் இருக்கிறார்கள். பலபகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணி சற்று மந்தமாகவே நடந்து வருகிறது.
காத்டுமாண்டு நகரில் 7 மாடி ஓட்டல் ஒன்றின் இடிபாடுகளை பிரான்ஸ் நாட்டின் மீட்பு குழுவினர் அகற்றிக் கொண்டிருந்த போது நேபாள மொழியில் உதவி உதவி என்று ஒருவர் குரல் கொடுப்பது அவர்களுக்கு கேட்டது.
இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு குழுவினர் இயந்திரங்கள் உதவியுடன் அகலமாக துளையிட்டனர். பின்னர் அந்த துளை வழியாக பிராண வாயுவை அவருக்கு கிடைக்கச் செய்தனர்.
பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு அவரைச் சுற்றியிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டது. அப்போது அந்த இடத்தில் சிலர் பிணமாகவும் கிடந்தனர்.
அவர்களுக்கு இடையில் சிக்கி காயங்களுடன் உதவி கேட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பிரான்ஸ் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவியும் அளித்தனர்.
அப்போது, மீட்கப்பட்டவரின் பெயர் ரிஷிகானல்(வயது 28)  என்பது தெரிய வந்தது. 82 மணி நேரத்துக்கு பின்பு அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
தான் உயிர் பிழைத்தது குறித்து, அந்த இளைஞர் கண்ணீருடன் கூறியதாவது:–
ஹோட்டலில் 2வது மாடியில் தங்கியிருந்தேன். திடீரென நில நடுக்கம் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழும் என்றோ, அதற்குள் சிக்கிக் கொள்வோன் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சில நொடிகளில் நடந்துவிட்டது.
கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய போது நாக்கு வறண்டு போனது. உதடுகளில் வெடிப்பு விழுந்தது. நகங்கள் எல்லாம் வெள்ளை நிறமாக மாறிவிட்டன.
இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களில் இருந்து துர்நாற்றமும் வீசியது. அதை தாங்கிக் கொள்வதே எனக்கு பெரும் சவாலாக இருந்தது. உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை அறவே போய்விட்டது.
தொடர்ந்து நாக்கு வறட்சி காரணமாக குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் குடிநீருக்கு எங்கே போவது?…எனவே வேறு என்ன செய்வதென்று தெரியாமல் எனது சிறுநீரையே பிடித்து குடித்தேன்.
இந்த 3 நாட்களிலும் தாகம் ஏற்பட்ட போதெல்லாம் எனது சிறுநீர்தான் நான் உயிர் வாழ பேருதவியாக இருந்தது. தெய்வாதீனமாக பிரான்ஸ் மீட்பு குழுவினர் என்னை உயிருடன் காப்பாற்றி விட்டனர். அவர்களை என்வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
இவ்வாறு ரிஷிகானல் கூறினார்.
3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட ரிஷகானலுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


No comments:

Post Top Ad