எதிர்வரும் ஒருவார காலத்திற்கு நாட்டில் கூட்டங்கள்,ஊர்வலங்கள்,ஒன்றுகூடல்களுக்கு தடை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, January 08, 2015

எதிர்வரும் ஒருவார காலத்திற்கு நாட்டில் கூட்டங்கள்,ஊர்வலங்கள்,ஒன்றுகூடல்களுக்கு தடை


கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிக அமைதியான தேர்தல் இதுவாகும். எதிர்வரும் ஒருவார காலத்திற்கு நாட்டில் எவ்வித கூட்டங்கள்- ஊர்வலங்கள்- ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்- பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் - தேர்தல் சட்டமூலத்தின் 69 ஆவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய தேர்தல் நடைபெற்ற தினத்திலிருந்து ஒரு வார காலத்திற்கு தேர்தல் காலமாக கருதப்படும். இக்காலப்பகுதியில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் நடந்துக்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில மிகவும் அமைதியான முறையிலும் குறைவான வன்முறைச் சம்பவங்களுடனும் நடைபெற்று முடிந்த தேர்தல் இதுவாகும்.கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 1200 வன்முறைச் சம்பவங்களும் 2010ஆம் ஆண்டில் 1090 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாண்டுகளுடன்  ஒப்பிடுகையில் 50 வீதத்திற்கும் குறைவான வன்முறைச் சம்பவங்களே இம்முறை இடம்பெற்றுள்ளன.இதுவரை 405 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 9 பேருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவர். அவர்களுக்கான ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடமைகளை செய்யவிடாது இடையூறு விளைவிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது.

மேலும் பாதுகாப்புக்காக நடமாடும் பொலிஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டிகளை எண்ணுமிடத்திற்கு கொண்டு செல்லும் போது தேர்தல் ஆணையாளரின் அனுமதி பெற்றவர்களே உடன் செல்வர்.

யாழ் மாவட்டத்தின் நாவலடி - அல்வாய் பிரதேசத்தில் மூடப்பட்ட வீடொன்றில் இன்றுகாலை 10.00 மணியவில் வெடிப்புச் சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் எவ்வித பொருள்- உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.

இதேவேளை பிற்பகல் 2.45 மணியளவில் வவனியா - மன்னார் வீதியின் நெளுக்குளம்  கலைமகள் வித்தியாலயத்திற்கருகிலும் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இவ்விரு பிரதேசங்களிலும் முறையே 67 மற்றும் 60 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறான அமைதியான தேர்தல் நடைபெற்ற பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம் என்று தெரிவித்தார்.


இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கருத்து தெரிவிக்கையில்- பாதுகாப்புக் கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இன்று இவ்வாறு ஒரு அமைதியான தேர்தலை நடத்துவதற்கு யுத்தம் நிறைவடைந்தமையே காரணம் என்றும் இச்சந்தர்ப்பத்தில் யுத்த நிறைவுக்கு தம்மை தியாகம் செய்த முப்படையினரையும் நன்றியுடன் நினைவுக்கூறவேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad