குருக்கள்மட முஸ்லிம்களின் புதைகுழிகள் விவகாரம் ! அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 14, 2014

குருக்கள்மட முஸ்லிம்களின் புதைகுழிகள் விவகாரம் ! அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள்


மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடத்தில் 24 வருடங்களுக்கு முன்பு கடத்தி, படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகள் என அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில் முரண்பாடுகள் எழுந்துள்ளன.


இந்த முரண்பாடு காரணமாக இன்று அந்த இடத்தை பார்வையிட்டு, அகழ்வுப் பணிகள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக வருகை தந்திருந்த நிபுணர்கள் குழு எந்தவொரு தீர்மானமும் இன்றி கொழும்பு திரும்பியது. 

களுவாஞ்சிகுடி மஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த மனிதப் புதைகுழியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி அகழ்வுப் பணிகள் இடம்பெறவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னோடியாகவே சட்ட மருத்துவ நிபுணர் புதை பொருள் மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறை உட்பட 15 பேர் நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் அந்த இடத்தை பார்வையிட அங்கு சென்றிருந்தனர். 

புதைகுழிகள் தொடர்புடைய வழக்கொன்றின் முறைப்பாட்டாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினரான மஜீத் ஏ. றவூப் ஒரு இடத்தை அடையாளம் காட்டிய அதேவேளை கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பாறுக் மொகமட் ஷிப்லி வேறு மூன்று இடங்களை அடையாளம் காட்டிய போது அந்த இடங்கள் தொடர்பாக முரண்பாடு ஏற்பட்டது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிபுணர் குழுவின் தலைவரான சட்ட மருத்துவ நிபுணர் டாக்டர் அஜித் தென்னக்கோன் குறித்த இடம் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையுடன் அகழ்வுப்பணிகளுக்கான திட்டமிடலை மேற்கொள்வதற்காக வந்திருந்த போதிலும் அந்த இடம் தொடர்பான முரண்பாடுகளினால் இது தொடர்பாக சரியாக திட்டமிட முடியவில்லை என்றார். 

இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்துமாறு போலிஸாரை கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார். 

நீதிமன்றத்தின் முடிவின் பிரகாரமே சரியான இடத்தை அடையாளம் கண்டு திட்டமிட்டு இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, இந்த அகழ்வுப் பணிகளின் போது அந்தப் பகுதியில் சுனாமியின் போது அவசர அவசரமாக இந்து சமய ஆசாரப்படி புதைக்கப்பட்ட சடலங்களுக்கு களங்கம் ஏற்படலாம் என உள்ளூர் இந்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. 

நிபுணர்களை அந்த இடத்திற்கு வருகை தந்து சந்தித்த குருக்கள்மடம் இந்து இளைஞர் பேரவையின் தலைவரான எஸ். சுதர்சனன், சுனாமியின் போது உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் தங்களால் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற உத்தரவின் பிரகாரமே இந்த அகழ்வு பணி இடம் பெறவிருப்பதால், இது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டியிருப்பதால் நீதிமன்றத்தை நாடுமாறு சட்ட மருத்துவ நிபுணர் குழுவின் தலைவரான டாக்டர் அஜித் தென்னக்கோன் பதில் அளித்தார். 

(பிபிசி)

No comments:

Post Top Ad