அடாவடித்தனங்களுக்கும்,வன்முறைகளுக்கும் பொலிஸ் மா அதிபரே பொறுப்பு ! ஹாபிஸ் நசீர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

அடாவடித்தனங்களுக்கும்,வன்முறைகளுக்கும் பொலிஸ் மா அதிபரே பொறுப்பு ! ஹாபிஸ் நசீர்

(tm)

அளுத்கமை, தர்காநகர், பேருவளை பிரதேசங்களில் நடைபெற்ற அடாவடித்தனங்களுக்கும் வன்முறைகளுக்கும் பொலிஸ் மா அதிபரே பொறுப்புக் கூறவேண்டும். அவர் உடனடியாக பதவி விலகல் வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 


இந்த வன்முறைச் சம்பவத்தால் 100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள்  சேதமாகியுள்ளன. 7 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. 80க்கும் மேற்பட்டோர்  காயப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இவ்வாறான அனர்த்தமொன்று நடைபெற முன்னர் முஸ்லிம் காங்கிரஸும் சிவில் அமைப்புக்களும் பொலிஸாருக்கு எதிர்வு கூறியும் அவர்கள் இதனை கணக்கெடுக்காது உடந்தையாக இருந்துள்ளமை வேதனையானது.

பொலிஸ் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரப்படை ஆகியவற்றின்  ஒத்துழைப்புடனே இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடந்துள்ளது. இது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு முஸ்லிம்களை பள்ளிவாசல்களில் இருக்கச் சொல்லிவிட்டு மின்சாரத்தை செயலிழக்கச் செய்துவிட்டும் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை இனவாத கும்பல்களின் அதி உச்ச காழ்புணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நாட்டின் யாரும் இனவாதம் பேசலாம், பலரும் காடைத்தனம் புரியலாம்  என்பதனை தர்கநகர் சம்பவம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் தமிழர்கள் மீது தெற்கில் நடத்திய காடைத்தனத்தினால் இந்த நாடே உருக்குலைந்தது. இன்றும் அதில் மீழ்ச்சி பெறாமல் உள்ளனர். பெரும்பான்;மையினமான சிங்கள யுவதிகள், இளைஞர்கள் 5 இலட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணிப்பெண்களாகவும்  கூலித்தொழிலாளர்களாகவும் பணியாற்றிய வரலாறு உள்ளது.

அங்கு சென்று 100 றியால் 200 றியால் என உழைத்து தமது நாட்டில் வாழ்வதற்கு வீடுகளை நிர்மாணித்து மற்றும் தமது வாழ்க்கைச் செலவினை சீர்செய்ய பொருளாதார ரீதியில் தங்கியிருக்கின்றமை வரலாறு. இவ்வாறுதான் முஸ்லிம் இளைஞர்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சிறுகச் சிறுக உழைத்து தமது வீடுகளையும் நிர்மாணித்தும் தமது தொழிலுக்காக வியாபார  கடையொன்றை நிர்மாணித்து வியாபரம் செய்து வந்தனர். 

அதனை ஒரு இரு மணித்தியாலயங்களுக்குள் கொள்ளையிட்டும் தீயிட்டு அழித்துவிட்டார்கள். இதனை அங்கு கடமையில் இருந்த பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இவ்வாறான அழிவினை சுலபமாக 3 மணித்தியாலயங்களுக்குள் செய்துவிட்டார்கள். இதில் பாதிக்கப்பட் முஸ்லிம் சமுகம் மீள அமைத்துக்கொள்வதற்கு எத்தனை காலம் எடுக்கும். இழந்த உயிர்களை உங்களால் மீளப் பெற்றுக்கொடுக்க முடியும். 

இனவாதத்தை தூண்டி இந்த அழிவைச் செய்யும்படி சொன்னவர்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். உணர்ச்சிகளையும் பொய்யான கட்டுக்கதைகளை வீரவசனம் பேசி மக்களை ஒரு நொடிப்பொழுதில் தூண்டிவிடலாம். இதில் இந்த நாடே மீண்டும் ஒரு இருண்ட பாதைக்கும் கொண்டு செல்லப்படும். இனங்களுக்கிடையே ஐக்கியத்தை குலைத்து இன குரோதத்தினை வளர்த்து அதில் குளிர் காய்பவர்களுக்கு இதன் பாரதூரம் பெரிதாக தெரியாது. இதில் கஸ்டப்படுபவர்கள் எதிர்கால சமுகமும் சகோதரத்துடன் வாழ் மக்களுமே.

எமது தேசிய கீதத்தில் நமோ நமோ மாத்தா... நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என பாடுகின்றோமே. இது எதற்கு?. தனிப்பட்ட இருவருக்கிடையில் நடைபெற்ற பிரச்சினையொன்றை வைத்து அதற்கு பௌத்த மதகுருவை வைத்து இதனை ஒரு தேசியப் பிரச்சினையாக்கின்றமை ஒரு கோழைத்தனமான செயலாகும்.

இதனை சிங்கள சமுகம் ஒன்று தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்றதொரு நிலையில் மீண்டும் ஏற்படுத்தி காடைத்தனங்களை அனுமதிப்பதற்கே சிங்கள இளைஞர்கள் இன்னும் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவீப்பிள்ளை இந்த நாட்டின் இனவாதம் மேலோங்கி  உள்ளது. என்றும் அடிக்கடி கூறிவருவது அண்மைய சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. எனவே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்' என அவர் மேலும் கூறினார். 

No comments:

Post Top Ad