வெட்கத்துடனும் மனக் கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்திலே ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் ! ஹிஸ்புல்லாஹ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

வெட்கத்துடனும் மனக் கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்திலே ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் ! ஹிஸ்புல்லாஹ்


நாங்கள் மிக வெட்கத்துடனும் மனக் கஷ்டத்துடனும்தான் இந்த அரசாங்கத்திலே ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் என பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
வடக்கு கிழக்கில் யுத்தம் நடந்த போது இங்குள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை அனுபவித்திருக்காத தென்பகுதி மக்கள் சமீபத்தில் நடந்த இந்த கலவரத்தின் போது நிறையத் துன்பங்களை அனுபவித்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
திடீரென்று வீடுகளெல்லாம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதும் அவர்கள் துன்பத்தாலும் துயரத்தாலும் துவண்டு போய்விட்டிருக்கின்றார்கள்.
அவர்கள் நிறைய இழந்திருக்கின்றார்கள், கோடிக்கணக்கான பொருளாதாரம், நூற்றுக்கணக்கான வியாபார ஸ்தலங்கள், நூற்றுக்கணக்கான வீடுகள், பல பள்ளிவாசல்கள் முற்றாகவே எரிக்கப்பட்டிருக்கின்றன.
நாலு பேர் கொல்லப்பட்டும் ஏராளமானோர் காயம்பட்டும் போய் உள்ளார்கள். என்னுடைய 25 வருடகால அரசியல் வரலாற்றிலே நான் வடக்கு கிழக்குக்கு வெளியே ஒரு சிறுபான்மைச் சமூகத்துக்கு நடந்த ஒரு பேரழிவாகவே இதனைப் பார்க்கின்றேன்.
இவ்வாறான ஒரு ஆபத்தான சூழ்நிலை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இலங்கையிலே சிறுபான்மையினரான முஸ்லிம்கள் ஒட்டு மொத்த சனத்தொகையில் வெறும் பத்து சத வீதமாகத்தான் வாழ்கின்றோம்.
கிழக்கிலே முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்தாலும் கிழக்கக்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் நாற்பது ஐம்பது குடும்பங்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் வாழ்கின்றார்கள்.
எனவே அவர்களது பாதுகாப்பு வாழ்வு இருப்பு என்பது மிக முக்கியமானது.
அதனை அந்தப் பகுதிக்கு வெளியே வாழ்கின்றவர்கள் வெறும் உணர்ச்சிக் கோஷங்கள் கண்டனங்கள், கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள், ஆக்ரோஷங்களினூடாக மாத்திரம்; உறுதிப்படுத்திவிட முடியாது.
எமது நடவடிக்கைகளின் தீவிரத்தால் இன்னும் பல, சிறிய சிறியதாக முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்கள் எரிந்து விடாமல் நாங்கள் பாதுகாக்க வேண்டும்.
இதுவிடயமாக நாங்கள் ஏழு முஸ்லிம் அமைச்சர்கள் சனிக்கிழமையன்று சுமார் மூன்று மணிநேரம் ஜனாதிபதியவர்களுடன் பதுளையில் வைத்துப் பேசினோம்.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதிலே நாங்கள் எல்லோரும் எந்தவிதமான வேறுபாடுகளுமில்லாமல் மிக உறுதியாக இருந்தோம். ஜனாதிபதியவர்களுடன் வாக்குவாதப்பட்டோம்.
பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் சிரேஷ்ட அமைச்சர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
நாங்கள் பேசாமல் அமைதியாகப் பார்வையாளர்களாக இருக்கின்றோம், இன்னும் வெட்கமில்லாமல் இந்த அரசாங்கத்திலே ஒட்டிக் கொண்டிருக்கின்றோம் என்று விமர்சிக்கப்பட்டாலும் நிலைமை அப்படியல்ல நாங்கள் எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுக்கின்றோம்.
அதிகாரத்திலே இருக்கின்ற சக்திகளோடு இணைந்துதான் எங்களுடைய பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காண வேண்டும். வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது வடகிழக்கைப் போன்றதல்ல.
வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பதன் மூலமோ கூச்சல் போடுவதன் மூலமோ அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது.
அதிகாரத்தரப்போடு இருந்து எங்களுடைய சமுதாயம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணவேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.
நாங்கள் பயந்து போய்த்தான் அதிகாரத்தரப்புக்கு முன்னால் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றோம் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.
இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நாம் பயப்படமாட்டோம். ஜனாதிபதிக்கோ அதிகாரமுள்ள அமைச்சர்களுக்கோ இன்னும் எந்தவொரு சக்திக்குமோ நாங்கள் பயப்பட வேண்டிய தேவையும் இல்லை.
நாங்கள் எங்களது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லும் போது கடுமையாக வாக்குவாதப்படுகின்றோம். முரண்படுகின்றோம், கண்டிக்கின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் வெளியிலே பிரசித்தப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.
இன்று அரசாங்கத்தைக் கண்டிப்பதையும் விமர்சிப்பதையும்தான் கூடுதலானவர்கள் விரும்புகின்றார்கள். உணர்சியின் உச்சத்திலே நின்று கொதிப்பது ஒரு போதும் அறிவுடமையாகாது என்றார்.

No comments:

Post Top Ad