சிங்கள இனவாத அமைப்புக்களால் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

சிங்கள இனவாத அமைப்புக்களால் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்

பெரும்பான்மை சிங்கள இனவாத அமைப்புக்களால் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், மேற்படி வன்முறைச் சம்பவங்கள் முன்னரே நன்கு திட்டமி;ட்ட மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிங்கள இனவாத அமைப்புக்களல் இன நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்றைய தினம் விடுத்து ள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த கண்டன அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த நாட்டில் தம்மை பெரும்பான்மை இனத்துவம் என அடையாளப்படுத்தும் சிங்கள பேரினவாதிகள்; இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனத்துவங்களின் மீது வெறுப்புணர்வு கொண்டு பல்வேறு தாக்குதல்களை நடாத்துகின்றமை புதியவிடயம் அல்ல.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக அளுத்கம, தர்ஹா நகர் மற்றும் வேருவளை பிரதேசங்களில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதோடு இதற்கெதிரான வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.
இந்த வன்முறைகளின் பின்னணியினையும், அவை நிகழ்த்தப்பட்டுள்ள விதத்தினையும் பார்க்கின்றபோது இது எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த சம்பவமாகவன்றி நன்கு திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட முழு அளவிலான இனவாத வன்முறையாகவே அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக அளுத்கம பிரதேசத்தில் பதட்டமான ஒரு நிலைமை நிலவிய சூழ்நிலையில் நேற்றைய தினம் பொது பல சேனா உள்ளிட்ட இனவாதக் குழுக்கள் சிலவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டமும், முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை நேரடியாகவே தூண்டும் வகையில் அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளுமே அங்கு நடாத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான வன்முறைக்கான ஆரம்பமாக அமைந்திருக்கின்றன.
கடந்த இரண்டு வருடங்களாக பொதுபலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்களினால் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பரவலாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்புணர்வு பிரச்சாரமும் இனவாத நடவடிக்கைகளும் நாட்டின் இனநல்லுறவுக்கும் அமைதிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் பாதகமான சூழ்நிலையினை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன.
யுத்தம் நிறைவடைந்து இனங்களுக்கிடையிலான நல்லுறவின் அடிப்படையில் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்ப வேண்டியது தேசத்தின் தலையான முன்னுரிமையாக மாறியிருக்கும் நிலையில் இது போன்ற குழுக்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு நாட்டின் சகல இன மத தரப்பு தலைவர்களும், புத்தி ஜீவிகளும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஆனால், அரசாங்கமோ அல்லது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொறுப்பினைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவினரோ காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையிலேயே அளுத்கமவிலும் பதட்டமான ஒரு சூழல் நிலவிய சந்தர்ப்பத்தில்  BBS உள்ளிட்ட இனவாதக்குழுக்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தினம் பொதுக்கூட்டமொன்று பாரிய அளவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை அறிந்த முஸ்லிம் சமூக தலைமைகளும் ஏனைய சமூகப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தை நடாத்த அனுமதிக்கப்பட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் எனும் அடிப்படையில் இதனை தடுத்து நிறுத்துமாறு அரசாங்கத்திடமும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடமும் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
எனினும், சமாதானத்தை இலக்காகக் கொண்ட இக்கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டு இனவாத வன்முறைகளை இலக்காகக் கொண்ட குறித்த பகிரங்கக்கூட்டம் அளுத்கம நகரில் நடைபெறுவதற்கான அனுமதியும் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை நேரடியாகவே தூண்டும் உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்தே நேற்றைய தினம் நடந்தேறிய கொடூரமான வன்முறைகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.
அழிவு நடவடிக்கைகள் யாவும் பொலிஸாரின் பிரசன்னம் இருந்த நிலையில் பூரணமான அரச ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சூழ்நிலையிலேயே நடந்தேறியுள்ளன. இந்நாட்டின் வரலாற்றில் சிறுபான்மை சமூகங்கள் மீது நடாத்தப்பட்ட மற்றுமொரு இனவாத வன்முறையாகவே அளுத்கம சம்பவம் வரலாற்றில் பதிவுசெய்யப்படும்.
சிறுபான்மை மக்கள் அமைப்புகளினாலும், பல்கலைக் கழக மாணவர்களினாலும், தொழில் சங்கங்கள் போன்றவற்றினாலும் அமைதியான முறையில் நடாத்தப்படும் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் "அமைதியைச் சீர்குலைக்கும்" எனக் காரணம் காட்டி தடுத்து நிறுத்துகின்ற பொலிஸார் நேரடியாகவே வன்முறையைத் தூண்டும் பொதுபலசேனாவின் பொதுக்கூட்டத்தை நடாத்த அனுமதித்திருக்கிறார்கள்.
அது போலவே, முழுமையான ஊரடங்குச் சட்டம் அங்கு அமுல்படுத்தப் பட்டிருந்த நிலையிலும் கூட வன்முறையை தடுத்து நிறுத்துவதற்கு தவறியிருக்கிறார்கள்.
மேற்படி வன்முறைகளின் போது 5 மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன, ஒரு பெண் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கடுமையாக காயமுற்று அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 80ற்கும் அதிகமானவர்கள் காயமுற்றுள்ளனர்,
150ற்கும் அதிகமான வீடுகள் எரித்து நாசம் செய்யப்பட்டிருக்கின்ற்ன 98 கடைகள் வியாபார நிலையங்கள் எரித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு சூறையாடவும் பட்டுள்ளன, 2 பாரிய தொழிற்சாலைகளும் 2 பாரிய மிருக வளர்ப்பு பண்ணைகளும் அழிக்கப்பட்டுள்ளன
இவற்றுக்கும் மேலாக 5 பள்ளிவாயல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய நாசகார வேலைகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படவேண்டும்.
எனவே, முஸ்லிம்கள் மீதான இந்த மிலேச்சத்தனமான வன்முறைகளுக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும், பாதுகாப்புத் தரப்பினருமே ஏற்க வேண்டும். ஜனாதிபதி அவர்களே பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவராகவும் இருக்கின்றார்.
எனவே அவரே இதற்கான முழுமையான பொறுப்பினையும் ஏற்கவேண்டும் என நாம் வலியுறுத்துவதோடு தமது அடிப்படைக் கடமையை அவர்கள் செய்யத் தவறியமை தொடர்பில் வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக எமது கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு உடனடியாக உத்தரவாதப் படுத்தப்படுவதோடு அவர்களது சுதந்திரமான நடமாட்டமும் இயல்பு வாழ்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்,
இழப்புகள் அனைத்தும் சட்டரீதியாக ஆவணப்படுத்தப்பட்டு அவை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,
இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படும், கருத்து வெளியிடும் பொதுபலசேனா போன்ற அமைப்புகள் உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும், அதன் செயலாளர் கைது செய்யப்படவேண்டும்,
பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மிகத்துரிதகதியில் உறுதி செய்யப்படுதல் வேண்டும்,
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து எமது கண்டனத் தீர்மானத்தினை இத்தால் நிறைவேற்றுகின்றோம்.

No comments:

Post Top Ad