முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை 65 வருட தமிழ் தேசத்திற்கு எதிரான வன்முறை ! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை 65 வருட தமிழ் தேசத்திற்கு எதிரான வன்முறை ! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(vi)

அளுத்கம பகுதியில் நடைபெற்றிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை வெறுமனே இனவாத அமைப்புக்களால் நடத்தப்பட்ட ஒரு வன்முறைச் சம்பவமாக பார்க்க முடியாது. இது தமிழ் தேசத்திற்கு எதிராக கடந்த 65வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீதிகளின் ஒரு கட்டமாகவே நாங்கள் பார்க்கவேண்டியிருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
 யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டு நாம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்த போது நாங்கள் ஒரு விடயத்தை எதிர்வு கூறியிருந்தோம். அதாவது தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் வரவேண்டும். அல்லது போனால் தமிழ்-முஸ்லிம் இனங்களை பிளவுபடுத்தவும் முயற்சிகள் எடுக்கப்படும்.
 மேலும் முள்ளிவாய்க்காலில் தமிழ் தேசத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் பெருமிதத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் சிங்கள தேசம் திரும்பும். நன்கு திட்டமிட்டவகையில் அழிப்பினை நடத்தும் என கூறியிருந்தோம்.
 கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் நிலையில் அந்த மக்களை குறிவைத்து அரசினாலும் அதன் ஒட்டுக் குழுக்களினாலும் அழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
மேலும் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையில் கடந்த காலத்தில் உருவாகியிருக்கும் விரிசல் நிலையினை மேலும் விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மறுபக்கம் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடமாகாணத்தில் முஸ்லிம் மக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேபோன்று தென்னிலங்கையில் பொருளாதார ரீதியாக முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில் 83ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களின் பொருளாதார பலத்தை அழித்ததைப் போன்றே இன்றைக்கு முஸ்லிம் மக்களுடைய பொருளாதார பலத்தை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே இவ் வாறான இனவாத நடவடிக்கைகளை நாம் கண்டுகொள்ளாமல் விடுவோமேயானால் கடந்த 65வருடகாலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளிலில் இருந்து எந்தவொரு பாடத்தினையும் நாங்கள் பெற்றிருக்கவில்லை. என்பதே அதன் அர்த்தமாக இருக்க முடியும். எனவே தமிழ் முஸ்லிம் சமுகங்கள் ஒன்றிணைந்து தமிழ்பேசும் ஒரு சக்தியினை உருவாக்கவேண்டிய கால கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். என்றே நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அவ்வாறு செயற்படுவதன் மூலமாக மாத்திரமே இலங்கை தீவை தனியே சிங்கள பௌத்த தேசமாக மாற்ற நினைக்கும் அரசாங்கத்தின் அல்லது அதன் ஒட்டுக்குழுக்களின் திட்டத்தை நாங்கள் முறியடிக்க முடியும். மேலும் நாங்கள் பாதிக்கப்படும்போது அல்லது நாங்கள் நொந்துகொண்டிருக்கும்போது எமக்கு ஒத்துழைப்பாக எவரும் செயற்பட்டிராத நிலையில் அது எமக்கு குற்றமாக தெரிந்திருந்தது. 
இந்நிலையில் எம்மைப்போன்றே மற்றொரு தரப்பு பாதிக்கப்படுகின்றபோது நாம் அதற்கு ஒத்துழைப்பினை வழங்காமல் இருப்பது நாம் கடந்தகாலத்திலிருந்து அல்லது எங்களின் கசப்பான அனுபங்களிலில் இருந்து நாங்கள் எந்தவொரு பாடத்தையும் அல்லது அனுபவத்தையும் பெற்றிருக்கவில்லை என்பதையே அடையாளப்படுத்தி காண்பிக்கும்.
எனவே இவற்றினடிப்படையிலேயே 20ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கான அழைப்பினை நாங்கள் விடுத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post Top Ad