கொழும்பு இந்துக்கல்லூரி ஆசிரியரின் மரணத்தில் மனைவி சந்தேகம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, May 21, 2014

கொழும்பு இந்துக்கல்லூரி ஆசிரியரின் மரணத்தில் மனைவி சந்தேகம் (படங்கள் இணைப்பு)


கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி விடுதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் பிரான்ஸ் கமிலாஸின் (வயது 37)  மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளது என்று அவரின் மனைவியான மஹேசா கமிலாஸ் தெரிவித்தார்.
நாத்தாண்டியாவிலுள்ள கல்லூரியொன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாக கடமையாற்றிவரும் மஹேசா, தனது கணவரின் மரணம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
எனது கணவர் ஒரு கிறிஸ்தவர். மன்னார், பனங்கட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். நான் பௌத்த மதத்தைச் சேர்ந்தவள். எனது சொந்த ஊர் குளியாபிட்டியவாகும். உடற்பயிற்சிக் கல்லூரியில் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம். பின்னர் காதலித்து திருமணமாகி எங்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையொன்றும் 2 வயதில் ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
எனக்கும் எனது கணவருக்கும் இடையில் எவ்வித குடும்பப் பிரச்சினையும் இல்லை. கடந்த 6 வருடங்களாக நாங்கள் இருவரும் மிகவும் சந்தோசமாகவே வாழ்ந்து வருகின்றோம். இறுதியாக அவர் என்னுடன், கடந்த திங்கட்கிழமை பேசினார்.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் குளியாபிட்டியவிலுள்ள எமது வீட்டுக்கு வரும் அவர், வெள்ளிக்கிழமையே கொழும்பு திரும்புவார். கடந்த 2005ம் ஆண்டில் பம்பலப்பிட்டி கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று அன்று முதல் இன்று வரை இங்கேயே கடமையாற்றி வருகின்றார்.
ஒவ்வொருநாளும் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி என்னுடன் கதைப்பார். ஆனால்,  நேற்று செவ்வாய்க்கிழமை அவரது கையடக்கத் தொலைபேசிகள் இரண்டும் இயங்கவில்லை. அவ்விரண்டு தொலைபேசிகளுக்கும் பலமுறை தொடர்பை ஏற்படுத்த முயன்றேன். ஆனால் அது பயனளிக்கவில்லை.
அதன்பின்னர், அவருடைய நண்பர் ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி விடயத்தை தெளிவுபடுத்தி, கல்லூரியில் உள்ள அவரது விடுதி அறையைச் சென்று பார்வையிடுமாறு கோரினேன். அந்த நண்பர், நேற்று இரவு 1 மணியளவில் கல்லூரியின் விடுதி அறைக்குச் சென்று பார்த்துள்ளார்.
இதன்போது, குறித்த அறை மூடப்பட்டுள்ளதாகவும் ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்த போது அவரின் கால்கள் மாத்திரம் தெரிந்ததாகவும் கூறிய நண்பர், இது தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119க்கு அழைப்பை மேற்கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொடங்கிய நிலையில் எனது கணவர் மரணித்துக் கிடந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது கொழும்பு பிரேத பரிசோதனை வைத்திய அதிகாரி மற்றும் பம்பலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பாதிகாரி ஆகியோரின் விசாரணைகளை அடுத்து கொழும்பு சவச்சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்று மஹேசா தெரிவித்தார்.
இதேவேளை, சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனையின் பின்னரே இது தற்கொலையா அல்லது யாரும் கொலைசெய்து கட்டித்தூக்கினார்களா என்று சொல்லமுடியும் என பிரேதப் பரிசோதனை வைத்திய அதிகாரி கூறினார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:

Post Top Ad