தொண்டமான் ஆற்று கடல்நீரேரியில் மீன்கள் இறந்ததற்கு ஒட்சிசன் பற்றாக்குயே காரணம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 19, 2014

தொண்டமான் ஆற்று கடல்நீரேரியில் மீன்கள் இறந்ததற்கு ஒட்சிசன் பற்றாக்குயே காரணம்


தொண்டமான் ஆற்றுக் கடல் நீரேரியில் பெரும் எண்ணிக்கையில் மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் ஆற்று நீரில் ஏற்பட்டுள்ள ஓட்சிசன் பற்றாக்குறைவே என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தொண்டமான் ஆற்றுக் கடல்நீரேரியில், செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று இலட்சக்கணக்கான மீன்கள், குறிப்பாகத் திரளி வகை மீன்கள் இறந்து கரையொதுங்கின.
இந்த அசாதாரண மீன் இறப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அப்பகுதிக்குச் சென்றிருந்தார். அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக தொண்டமானாற்றுக் கடல் நீரேரி வழமைக்கு மாறாக அதிகம் வற்றியுள்ளது. எஞ்சியுள்ள குறைந்தளவு நீரில் எல்லா மீன்களுக்கும் போதுமான அளவு ஒட்சிசன் இல்லை. அதுமட்டும் அல்லாமல் உயர் வெப்பநிலை காரணமாக நீரில் ஒட்சிசனின் கரைதிறனும் குறைவாக உள்ளது.
இந்த ஒட்சிசன் பற்றாக்குறைவே மீன்களின் சடுதியான இறப்புக்கான பிரதான காரணமாகும். ஒட்சிசன் பற்றாக்குறைவுக்குச் சகிப்புத் தன்மையைக் கொண்டிராத திரளி மீன்களே முதலில் அதிகளவில் இறக்க ஆரம்பித்துள்ளன.
ஒட்சிசன் பற்றாக்குறைவுக்கு ஓரளவேனும் தாக்குப் பிடிக்கக்கூடிய கெளிறு மற்றும் விலாங்கு மீன்கள் நீரின் மேல்மட்டத்துக்கு வந்து சுவாசிக்க முயல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.
நீர் ஆவியாகுவதால் ஏற்படும் உப்புச் செறிவு அதிகரிப்பும் இன்னுமொரு உபகாரணமாக இருக்கக் கூடும்.மீன்களின் இறப்புக்கு நஞ்சு காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன், மாகாண சபை உறுப்பினர்கள் க.சுகிர்தன், க.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜ், வல்வெட்டித்துறை நகர சபைச் செயலாளர் கிரிஜா வாசுதேவன், வலி. கிழக்குப் பிரதேசசபை முன்னாள் தலைவர் அ.உதயகுமார், வடமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், யாழ்.மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் க.கருணாநிதி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கொன்ஸ்ரன் ஜக்சீல் மற்றும் தொண்டமானாறு கடற்றொழிலாளர் சங்கச் செயலாளர் ந.வர்ணகுலசிங்கம் ஆகியோரும் அப்பகுதிக்குச் சென்றிருந்தார்கள்.
இன்றும் அப்பகுதியில் கணிசமான அளவு மீன்கள் இறந்து கரையொதுங்கி இருந்ததனால் அவற்றை அகற்றிப் புதைக்கும் பணியில் வல்வெட்டித்துறை நகரசபை, கரவெட்டி பிரதேச சபை மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளைச் சேர்ந்த பணியாளர்களுடன் வடமாகாண சுற்றாடல் அமைச்சின் பணியாளர்களும் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
No comments:

Post Top Ad