பொய் குற்றச்சாட்டு சுமத்திய பொதுபல சேனா அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லியன் ரூபா தரவேண்டும் ; ரிசாத் பதியுதீன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

பொய் குற்றச்சாட்டு சுமத்திய பொதுபல சேனா அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லியன் ரூபா தரவேண்டும் ; ரிசாத் பதியுதீன்


வில்பத்து வனத்தின் 22 ஹெக்டேயர் காட்டு பகுதியை அழித்து அரபு கொலனி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக பொதுபல சேனா சுமத்தி வரும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினர்.
1990 ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் அகதிகளாகினர். நானும் அந்த அகதிகளில் ஒருவன்.
மரிச்சுக்கட்டி, கரடக்குழி, பாளைக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்கள் வில்பத்து வனத்தின் எல்லையில் அமைந்துள்ளன.
முஸ்லிம்களின் சொந்த கிராமங்களிலேயே அவர்களை மீள்குடியேற்றுவதற்கான ஜாசின் சிட்டி என்ற வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இந்த வீடமைப்புத் திட்டத்துடன் சம்பந்தமில்லாத சில முஸ்லிம் குடும்பங்கள் வில்பத்து வனத்திற்கு அருகில் கூடாரங்களை அமைத்து வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கும் எனது வீடமைப்புத் திட்டத்திற்கும் எந்த தொடர்புமில்லை. இது சட்டவிரோதமானது என்பதை நான் அறிவேன், இதனால் அந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இதனடிப்படையில் இரண்டு வாரங்களில் அங்கிருந்து வெளியேறுமாறும் கூடாரம் அமைத்து குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்பத்து வனத்தில் சட்டவிரோதமாக முஸ்லிம் பள்ளி வாசல் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா சுமத்தும் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை.
குறித்த பிரதேசத்தில் ஆரம்பத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான மூன்று பள்ளிவாசல்கள் அந்த பிரதேசத்தில் இருந்தன. அவற்றை விடுதலைப் புலிகள் அழித்தனர்.
மூன்று பள்ளி வாசல்களுக்கு பதிலாக ஒரே ஒரு பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும் அது வில்பத்து வனத்திலேயோ அதற்குரிய காணியிலேயோ நிர்மாணிக்கப்படவில்லை.
பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி எனக்கு எதிராக மேற்கொண்டுள்ள அவதூறுக்கு இழப்பீடாக 500 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் எனக் கோரி பொதுபல சேனாவுக்கு சட்டத்தரணி ஊடாக அறிவிப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டை வழங்க இந்த மாதம் 21 ஆம் திகதி வரை பொதுபல சேனாவுக்கு நான் கால அவகாசத்தை வழங்குகிறேன்.
21 ஆம் திகதிக்குள் உரிய பதில் வழங்கப்படாது போனால் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளன.
இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கு 300 வீடுகளை நிர்மாணிக்கும் போது மட்டும் எதிர்ப்பு வெளியிடப்படுகிறது என்றும் அமைச்சர் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad