அரசாங்கத்துக்கு வாக்களிப்பது பள்ளியை உடைப்பதற்கு சமமான ஹராம் ! அஸாத் சாலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 06, 2014

அரசாங்கத்துக்கு வாக்களிப்பது பள்ளியை உடைப்பதற்கு சமமான ஹராம் ! அஸாத் சாலி


மேல் மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கோ அல்லது அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கோ (முஸ்லிம்) மக்கள் வாக்களிப்பார்களானால் அது பள்ளியை உடைப்பதற்கு சமமான ஹராம் நடவடிக்கை ஆகும். என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார். 

நடைபெறவுள்ள மேல் மாகாண சபை தேர்தலில் மனோ கணேசனையோ முஜிபுர் ரகுமானையோ விக்கிரமபாகு கருணாரட்ணவையோ ஆதரியுங்கள் மாறாக அரசுடன் அங்கம் வகித்துக் கொண்டு பள்ளிகளை உடைக்கும் அராஜக சக்திகளுக்கு வாக்களிக்காதீர்கள் இது ஹராமுக்கு சமமான செயலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார். 
 
அதிகாரத்தினை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தி நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேசத்திடம் பொய்யான முகமூடியை அணிந்துக்கொண்டுள்ள அரசாங்கம் உள்நாட்டில் கோயில் கிறிஸ்தவ திருச்சபை பள்ளி என்று சிறுபான்மையினர்களின் மத தலங்களை உடைக்கின்றன. 
 
அண்மையில் அல் ஹசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி பங்கேற்ற போது இலங்கையில் பள்ளிகள் உடைக்கப்படுவது தொடர்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி இலங்கையில் அப்படி எதுவும் நடந்தது இல்லை. அது பொய்யான தகவல் என்கிறார். ஆனால் நேற்று முன்தினம் கூட கடவத்தை வீதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுவதற்கு நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
உண்மையில் பள்ளிவாசல், கோவில், திருச்சபை போன்ற சிறுபான்மை இன மக்களின் மத ஸ்தலங்களில் தெய்வ வழிபாடு தான் நடத்துகிறோமே ஒழிய கஞ்சா, அபின், கெசீனோ சூதாட்டம் எதுவும் நடாத்தப்படவில்லை. இந்த நாட்டில் கஞ்சா கடத்துபவர்கள் குடு வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் சுதந்திரமாக வாழ்கின்றனர். ஆனால் எமக்கு சிறுபான்மை மக்களுக்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு கூட சுதந்திரம் இல்லை. நாம் பள்ளியில் தெய்வத்தின் ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்தனை மட்டுமே செய்கிறோம் ஒழிய அங்கு கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. 
 
ஆனால் தொடர்ந்து பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. மூடப்படுகின்றன. அதற்கு சட்டமும் நீதியும் கூட ஆதரவாக உள்ளமை என்பது வேதனை அளிக்கிறது. 
 
ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் ஆதரவுடனையே சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. பள்ளிகள் உடைக்கப்படுகின்றன. இந்த தருணத்தில் அரசுடன் கூட்டு வைத்துக் கொண்டு அரசியல் இலாபத்திற்காக செயற்படுபவர்களுக்கு நாம் ஆதரவு நல்கினால் அது பள்ளிவாசலை உடைப்பதற்கு கல் எடுத்து கொடுப்பவர்களை ஆதரிப்பது போன்றதாகும். இதனை ஒரு போதும் செய்யக் கூடாது. மாறாக சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் இன மத பேதமற்று குரல் கொடுக்கின்ற மனோ கணேசன், முஜிபுர் ரகுமான், விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோருக்கு வாக்களித்து சிறுபான்மை மக்களின் பலத்தை உறுதிப்படுத்தவேண்டும். 
 
யுத்தம் முடிந்து விட்டது நாட்டில் எல்லோரும் சமாதானமாக சந்தோஷமாக வாழ்வதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் நேற்று கூட நுகேகொடையில் கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றது. நாட்டின் ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் சர்வாதிகார ஆட்சியை நோக்கியே நாம் பயணிக்கிறோம் என்றார்.

No comments:

Post Top Ad