முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் புலிகளால் படுகொலை செய்து புதைக்கப்பட்டவை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 04, 2014

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் புலிகளால் படுகொலை செய்து புதைக்கப்பட்டவை

(tm)

முல்லைத்தீவு, உடையார்க்கட்டு, 200 வீட்டுத்திட்ட காணியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுடையவை என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமாக அஜித் ரோஹன தெரிவித்தார். 


குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கோபால் கோடீஸ்வரன் என்பவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், இந்த எச்சங்களுக்குரியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். 

கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் குறித்த பகுதியொன்றிலுள்ள காணியொன்றில் சடலங்கள் புதைக்கப்படுவதாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரால் கோபாலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். 

அத்துடன், மேற்படி எச்சங்களுக்குரியவர்கள் அப்பகுதியில் புதைக்கப்படுவதை கோபால் நேரில் கண்டுள்ளார் என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று அஜித் ரோஹன கூறினார். 

முல்லைத்தீவு, உடையார்க்கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள காணியிலிருந்து கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 9 பேருடைய மனித எச்சங்களும் அந்த எச்சங்களைச் சுற்றியுள்ள நிலையில் 9 பாய்களும், ஒருவரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டன. 

குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்காக நிலத்தினைப் பண்படுத்தியபோது, நிலத்தினுள் மண்டையோடு இருப்பதை அவதானித்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். 

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற  பதில் நீதவான் யாழ். மாவட்ட சட்ட மருந்துவ அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த நிலம் தோண்டப்பட்டது.

இதன்போது 9 பேருடைய மனித எச்சங்களை மீட்டு, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில், குறித்த மனித எச்சங்கள் மரபணு பரிசோதனைக்காக யாழ். பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றார். 

No comments:

Post Top Ad