கணவனால் முகம் சிதைந்த ஆப்கான் பெண் இந்தியாவில் வாழ விருப்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 25, 2014

கணவனால் முகம் சிதைந்த ஆப்கான் பெண் இந்தியாவில் வாழ விருப்பம்


ஆப்கானிஸ்தானில் உள்ள மஷார்–இ–ஷரீப் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா ஷரீன் (17). ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். பள்ளியில் படித்து கொண்டிருந்தார்.


இந்த நிலையில் வசதி படைத்த 31 வயது உறவுக்கார வாலிபர் இவரை திருமணம் செய்ய விரும்பினார். பண நெருக்கடி காரணமாக பெற்றோரும் ஷகீலாவை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
கனவுகளுடன் தனது இல்லற வாழ்க்கையை தொடர கணவர் வீட்டுக்கு சென்ற ஷகீலாவுக்கு பேரிடி காத்திருந்தது. அவரை கணவரும், அவரது வீட்டை சேர்ந்தவர்களும் அடித்து உதைத்து சித்ரவதை செய்து துன்புறுத்தினர்.

எனவே அவர் தனது தாய் வீட்டுக்கு திரும்பினார். அங்கும் அவரை நிம்மதி ஆக இருக்க விடவில்லை. கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்கு வந்த கணவர் ஷகீலாவின் முகத்தில் வேட்டை துப்பாக்கியால் சுட்டார்.
அதில், அவரது முகம் சிதைந்தது. ஒரு கண், பற்கள் மற்றும் மூக்கு பகுதிகள் சிதைந்தன. அதைத் தொடர்ந்து அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரை ஆப்கானிஸ்தான் அரசு டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவரது தொடை பகுதியில் இருந்து சதைகள் எடுத்து முகத்தில் ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.
தற்போது அவர் பெருமளவில் குணமடைந்து விட்டார். ஆனால் டாக்டர்களால் அவரது கண்பார்வையை திரும்ப தர முடியவில்லை. ஏனெனில் அப்பகுதி முழுவதும் துப்பாக்கி சூட்டில் சிதைந்து விட்டது. எனவே செயற்கை கண் பொருத்த 6 மாதத்துக்கு பிறகு மீண்டும் மற்றொரு ஆபரேசன் நடத்தப்பட உள்ளது.

ஓரளவு குணமடைந்த நிலையில் இருக்கும் ஷகீலா ஷரீன் மீண்டும் ஆப்கானிஸ்தான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் கணவரும், அவரது குடும்பத்தினரும் தனக்கு மீண்டும் தொல்லை கொடுப்பார்கள் என அஞ்சுகிறார்.

எனவே இந்தியாவிலேயே நிரந்தரமாக வாழ விரும்புகிறார். இதை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் இதை இந்திய அரசு ஏற்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க அனுமதிப்பதில்லை. அவரது சிகிச்சைக்காக ‘விசா’ காலத்தை நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது என அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post Top Ad