முசலி பிரதேச மக்கள் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 09, 2014

முசலி பிரதேச மக்கள் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் எனவும், மீள்குடியேறியுள்ள காணியற்ற குடும்பங்களுக்குக் காணிகள் வழங்க வேண்டும் எனவும் கோரி சாலை மறிப்புப் போராட்டம் ஒன்று ஞாயிறன்று நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்தினால், முருங்கன், சிலாவத்துறை, மறிச்சுக்கட்டி ஊடான மன்னாருக்கும் கற்பிட்டிக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்துகள் நண்பகல் முதல் நான்கு மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
விடுமுறை நாளாக இருந்தபோதிலும், இந்த வீதியூடாகப் பொதுப்போக்குவரத்து வாகனங்களிலும் தனியார் வாகனங்களிலும் பயணம் செய்த பெரும் தொகையான பயணிகளின் பிரயாணம் தாமதமடைந்திருந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டதையடுத்து, இடம்பெயர்ந்து சென்று 2010ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மீள்குடியேறிய இந்தக் கிராமங்களின் வயல் காணிகளின் ஒரு பகுதியைக் கடற்படையினர் படை முகாம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தியிருந்தனர்.
இதனால் இந்த மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன், இடம்பெயர்ந்திருந்த இருபது வருட காலத்தில் அதிகரித்துள்ள குடும்பங்கள் குடியேறுவதற்கு போதிய காணிகள் இல்லாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது.
கையகப்படுத்தப்பட்ட விவசாய காணிகளைத் தரவேண்டும், காணியற்ற குடும்பங்கள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற தமது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினாலேயே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக மரைக்கார்தீவு கிராம மக்களின் தலைவர் மெலளவி மஹ்முத் தௌபிக் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிலாவத்துறை காவல்துறையினர் தடைசெய்யப்பட்டிருந்த வீதியைத் திறப்பதற்கான பேச்சுக்களை ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நடத்தினர்.
ஆயினும் உரிய அதிகாரிகள் நேரடியாக வந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் சாலை மறிப்புப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கலகம் அடக்கும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வருகை தந்த முசலி பிரதேச சபைத் தலைவர் டபிள்யு.எம்.எஹியான், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், திங்களன்று அவருடைய தலைமையில் கூடிப்பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து வாகன போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டன.
எனினும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையில் தமது போராட்டம் அமைதியான முறையில் நாளையும் தொடரும் என்று மௌலவி தௌபீக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


No comments:

Post Top Ad