ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ஈரான் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, February 12, 2014

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ஈரான்


இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அடுத்த மாதம் கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் போது ஈரான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை வந்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஹஜ் விவகாரங்களுக்கான ஆன்மீகத் தலைவரின் பிரதிநிதி ஆயத்துல்லாஹ் காஸி அஸ்கர் நேற்று தெரிவித்தார்.
இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் இலங்கை- ஈரானுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளையும், அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பையும் உலகிற்கு காண்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உலகில் மனித உரிமைகளை மீறக்கூடிய முதன்மை நாடாக அமெரிக்கா விளங்குவதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் எந்த நாடும் தைரியத்துடன் குரல் கொடுப்பதில்லை என்றும் குற்றஞ் சாட்டினார்.
ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 35 வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் நிகழ்வு பஹ்மன் சமாதானம் மற்றும் ஐக்கியத்திற்கான அடையாளம் என்ற தொனிப் பொருளில் கொழும்பிலுள்ள மானுடவியல் கற்கைகளுக்கான அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மேற்படி பல்கலைக்கழகத்தின் இலங்கை கிளை தலைவர் ஸெய்யத் ஹமீதி ரிஸா ஹக்கீகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் டொக்டர் முஹம்மத் நபி ஹஸனிபூர் சிரியாவுக்கான முன்னாள் ஈரான் தூதுவர் டொக்டர் பாகெரி, இலங்கை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸமீல் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆயத்துல்லா காஸி அஸ்கர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மிகவும் பழமை வாய்ந்தது. இலங்கை ஒரு பெளத்த நாடாக இருந்தாலும் ஈரான் தனது மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
சர்வதேச மட்டத்தில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக ஈரான் செயற்படுகின்றது. யாரும் அநியாயம் செய்யவும் அநியாயம் செய்யப்படவும் நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை.
இலங்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே தற்பொழுது தொடர்ச்சியாக இலங்கையின் மீது மனித உரிமைகள் மீறல் என்ற பாணியில் குற்றஞ்சாட்டி வருகிறது. என்றாலும், இலங்கை தனது சொந்த காலில் ஊன்றி எழுந்து நிற்கத் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
இலங்கையின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்கு, பாலங்களை கட்டும் பணிகள் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு ஈரான் உதவி வருவது போன்று இலங்கை முன்னெடுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் ஈரான் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

No comments:

Post Top Ad