இனவாதம் பேசுவோர் பட்டியலில் ஐ.தே.க.வும் சேர்ந்துகொண்டது கவலைக்குரியது: மனோ - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 04, 2013

இனவாதம் பேசுவோர் பட்டியலில் ஐ.தே.க.வும் சேர்ந்துகொண்டது கவலைக்குரியது: மனோ

(tm)

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் அழைப்பை ஏற்று வடக்கு செல்வது தனி ராஜ்யம் அமைக்கவா என்று கேள்வி எழுப்பி, இந்திய பிரதமரின் உத்தேச வடக்கு விஜயத்தை தாம் எதிர்ப்பதாக, நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐதேக கூறியுள்ளது. இதன்மூலம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் குறை கண்டு இனவாதம் பேசும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, குணதாச அமரசேகர, பொதுபல சேனையின் கலபொட அத்தே ஞானசாரர் ஆகியோர் அடங்கிய பட்டியலில், ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற குழுவின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்கவும் சேர்ந்து கொண்டுள்ளார். ஜோன் அமரதுங்கவின் இந்த கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். ஐதேகவின் இக்கருத்து, இன்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும், தமிழ் சிவில் சமூகத்தையும் விசனப்படுத்தியுள்ளது.
ஐதேக, சிங்கள வாக்குகளை பெற வேண்டும் என்பது உண்மை. அதைத்தான் நானும் நீண்டகாலமாக சொல்லி வருகிறேன். ஆனால் அதற்கு இது வழியல்ல. மஹிந்தவை பின்பற்றுவதன் மூலமாக சிங்கள வாக்குகளை ஐதேக பெற முடியாது. ஐதேக எங்கள் தோழமை கட்சிதான். ஆனால், நாங்கள் உண்மையை பேச ஒருபோதும் தயங்குவதில்லை. அதனால்தான் நாம் தனி கட்சியாக செயல்படுகிறோம். ஆகவே இப்படியே போனால் சிங்கள வாக்கும் இல்லை, சிறுபான்மை வாக்கும் இல்லை என்ற நிர்க்கதி நிலைக்கு ஐதேக தள்ளப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
விக்கினேஸ்வரன் நேற்று முதல்நாள் புதிதாக ஓர் அழைப்பை வடக்குக்கு வரும்படி, இந்திய பிரதமருக்கு அனுப்பவில்லை. இது விக்கினேஸ்வரன், வட மாகாணசபையின் முதல்வராக பொறுப்பேற்றவுடன், இந்திய பிரதமருக்கு விடுத்த பழைய சம்பிரதாய அழைப்பாகும். இலங்கை நாட்டுக்கு வரும்போது யாழ்ப்பாணம் வந்து செல்லுங்கள் என விடுக்கப்பட்ட அழைப்பாகும். டெல்லியிலிருந்து நேரடியாக பலாலி விமான நிலையத்தில் வந்து இறங்குங்கள் என விக்கினேஸ்வரன், மன்மோகன் சிங்கை அழைக்கவில்லை. இது இலங்கையில் உள்ள இந்திய தூதரின் மூலமாக விடுக்கப்பட்ட அழைப்பாகும்.
இந்தியாவிற்கான விசேட அழைப்புக்கு காரணம், இந்நாட்டில் நிலைபெற்று, இன்று வடக்கில் முதன்முறையாக அமைந்துள்ள மாகாணசபை, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தை என்பதும், வடக்கு தேர்தல் நடைபெற இந்தியாவின் அழுத்தம் முதலிடம் வகித்தது என்பதும் இந்நாட்டில் பகிரங்க உண்மையாகும். இந்த பின்னணியில் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்காமல், உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனியையா யாழ்ப்பாணம் வர சொல்லி அழைக்கமுடியும்?
ஒருவேளை இலங்கை அரசு விரும்பினாலும்கூட, இந்திய மத்திய அரசு இலங்கையில் ஒரு தமிழ் ராஜ்ஜியம் உருவாவதை ஆதரிக்காது என்பது அரசியலில் குழந்தைக்கு கூட தெரியும். எனவே மன்மோகன் சிங் வடக்குக்கு செல்வது தனி தமிழ் ராஜ்ஜியம் அமைக்கவா என்ற ஜோன் அமரதுங்கவின் கூற்று, விடயம் தெரியாத சிங்கள மக்களை தூண்டிவிடும் அப்பட்டமான இனவாத கூற்றாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்று வடக்கில் ஒரு கையால் கொடுத்ததை மறு கையால் இந்த இனவாத அரசு பறிக்கிறது. பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த வேண்டும் எனபதற்காக, உலக அழுத்தத்தை உள்வாங்கி அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்தி மாகாணசபையை உருவாக்கியது. இன்று அந்த மக்கள் ஆணையை பெற்ற மாகாணசபையை நடக்க விடாமல் அட்டகாசம் செய்கிறது. முதலமைச்சர் ஒருநாள் பணி முடிந்து வீடு போய் தூங்கி எழுந்து, மறுநாள் அலுவலகம் வந்தால், முதல்நாள் பணியில் இருந்த செயலாளர் மாற்றப்பட்டு, வேறு ஒருவர் பணியில் இருக்கிறார். ஆகவே இந்த மாதிரியான இராணுவ ஆட்சியின் அலங்கோலங்களை, விக்கினேஸ்வரன் உலகத்தை அழைத்து சொல்லத்தானே வேண்டும்? சும்மா இருப்பதற்கு மக்கள் அவருக்கு ஆணை வழங்கவில்லை. நாங்களும் சும்மா இருப்பதற்கு அவருக்கு ஆதரவு வழங்கவில்லை. இது தமிழர்களின் ஜனநாயக உணர்வலை. இதை ஐக்கிய தேசிய கட்சி உட்பட அனைத்து சிங்கள கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். விக்கினேஸ்வரனை குறைக்கூற அடுத்த முறை வாயை திறக்குமுன் இதை நினைத்துகொள்ள வேண்டும்.
வடக்கின் முதல்வர் வடக்கு மக்கள் ஆணையை பெற்ற விக்கினேஸ்வரனா அல்லது கொழும்பிலிருந்து நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சந்திரசிறியா? இந்த கேள்வியை ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரங்கில் எழுப்ப வேண்டும். புதியதாக இனவாதம் பேசுவதை நிறுத்திவிட்டு, 13ஆம் திருத்தத்தை இந்நாட்டு அரசியலமைப்பில் அறிமுகப்படுத்திய கட்சி என்ற முறையில் இதுபற்றிய உண்மையை சிங்கள மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.

No comments:

Post Top Ad