சாதாரண உறுப்பினரான சிராஸூக்கு மாநகர சபையில் எப்படி அலுவலகம் வழங்க முடியும் ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, December 23, 2013

சாதாரண உறுப்பினரான சிராஸூக்கு மாநகர சபையில் எப்படி அலுவலகம் வழங்க முடியும் ?

(tm)

"கல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் பிரதி மேயர் அல்ல. தற்போது அவர் சாதாரண மாநகர சபை உறுப்பினரே ஆவார்" என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.


அத்துடன் சிராஸ் மீராசாஹிபின் பெயர் கல்முனை பிரதி மேயராக இன்று திங்கட்கிழமை வரையிலும் தேர்தல்கள் ஆணையாளரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் சாதாரண உறுப்பினரான சிராஸ் மீராசாஹிபிற்கு கல்முனை மாநகர சபையில் எப்படி அலுவலகம் வழங்க முடியும் என கல்முனை மாநகர ஆணையாளர் கேள்வி எழுப்பினார்.

சிராஸ் மீராசாஹிபிற்கு கல்முனை மாநகர சபையில் பிரதி மேயர் அலுவலகம் வழங்கப்படவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"கல்முனை மேயராக செயற்பட்ட சிராஸ் மீராசாஹிப் கடந்த நவம்பர் மாதம் தனது மேயர் பதவியை இராஜினாமா செய்தார். 
இதன் காரணமாக ஏற்பட்ட மேயர் வெற்றிடத்திற்கு பிரதி மேயரான சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் மேயராக நியமிக்கட்டு தற்போது செயற்படுகின்றார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் பெயரை மேயராக சிபாரிசு செய்து தேர்தல்கள் செயலகத்துக்கு அறிவித்துள்ளது.  எனினும், சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கல்முனை மேயர் என இன்று திங்கட்கிழமை வரையிலும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை.

இதனால் கல்முனை பிரதி மேயரான நிசாம் காரியப்பர் பதில் மேயராகவே தற்போது செயற்படுகின்றார். நிசாம் காரியப்பரின் பெயர் கல்முனை மேயர் என வர்த்தமானி ஊடாக அறிவித்ததன் பின்னரே கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பதவி வெற்றிடமாகும்.

அதன் பின்னரே பிரதி மேயர் விடயம் தொடர்பில் கலந்துரையாட முடியும். எனினும், அதுவரையிலும் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் சாதாரண மாநகர சபை உறுப்பினரே ஆவார். சாதாரண ஒரு மாநகர சபை உறுப்பினருக்கு எப்படி பிரதி மேயரின் அலுவலகத்தினை வழங்க முடியும்? இது எந்த வகையில் நியாயமாகும்' என்றும் ஆணையாளர் வினவினார்.

"கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிப் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் வரை பிரதி மேயருக்குரிய எந்த சலுகையினையும் அவர் எதிர்பார்க்க முடியாது" என்றார் மாநகர ஆணையாளர்.

No comments:

Post Top Ad