கல்முனை தமிழர்களுக்குச் சொந்தமான பூர்வீகக் கிராமமாம் ! த.தே.கூட்டமைப்பு சொல்கிறது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, December 18, 2013

கல்முனை தமிழர்களுக்குச் சொந்தமான பூர்வீகக் கிராமமாம் ! த.தே.கூட்டமைப்பு சொல்கிறது


கல்முனை தமிழர்களுக்குச் சொந்தமான பூர்வீகக் கிராமம் என்பதனை அறிய முஸ்லீம் அரசியல்வாதிகள் கடந்த கால வரலாற்றுப் பாதையை ஒருதடவை நினைத்துப் பார்க்க வேண்டும் என கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்முனை மாநகரசபையின் த.தே.கூட்டமைப்பின் எதிர்க்கட்சித்தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் உறுப்பினர்களான அ.விஜயரெட்ணம், வி.கமலதாசன், சி.ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையிலே  அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பில் இடம்பெற்ற கல்முனை தமிழ் பிரிவு பிரதேசம் தொடர்பாக கல்முனை முக்கியஸ்த்தர்களுடனான சந்திப்பு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அண்மையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான முழு அதிகாரம் வழங்குவது தொடர்பாக பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் முஸ்லிம் அரசியல் வாதிகள் வெளியிட்ட கருத்துக்களும் செயற்பாடுகளும் கல்முனையின் பூர்வீகக்குடிகளாக வாழ்ந்து வரும் தமிழ்மக்களை மென்மேலும் அடக்கி ஒடுக்கி ஆள நினைக்கும் கபடநாடக செயற்பாடாகவே பார்க்கவேண்டி உள்ளது.
இதன்மூலம் கடந்த காலங்களில் முஸ்லிங்கள் பல்வேறு அடக்கு முறைகளையும் அழிவுகளையும் அநீதிகளையும் புறக்கணிப்புக்களையும் மறந்து தற்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்களுடன் நட்புறவை பேணிவரும் நிலையில் கடந்த 30வருடங்களாக 29 கிராம சேவகர் பிரிவுகளையும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட சனத்தொகையினையும் சிறந்த பிரதேச செயலகத்திற்கான பௌதீக ஆளணியுடன் இயங்கிவரும் இப்பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரத்துடன் கூடிய ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் 30வருட கனவை நனவாக்க அரசும் அரசு சார்ந்த அமைப்புக்களும், புத்திஜீவிகளும் செயற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
எமது சகோதர இனமாக நாம் பார்க்கும், பழகும் முஸ்லிம் இனத்தின் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் தமிழ் இனத்தை அடக்கியாள நினைக்கும் சிந்தனை தமிழ் மக்கள் மனதில் வேதனையைத் தருவதுடன் இவ்வினத்துடன் தொடர்ந்து சேர்ந்து வாழ முடியுமா எனும் அச்சநிலையையும் ஏற்படுத்தியுள்ளது இதற்குப் பல வரலாறுகளை புரட்டிப்பார்க்கும் தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
1963ஆம் ஆண்டிற்கு முன் மட்டக்களப்புடன் அம்பாறை மாவட்டம் இணைந்திருந்தபோது தமிழ்மக்களால் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருந்ததில்லை முஸ்லிங்கள் தமிழ்கட்சிகளில் தான் அரசியல் செய்தார்கள் தமிழர்களும் முஸ்லிம் மக்களுக்கே வாக்களித்து பல முஸ்லிம் அரசியல் தலைவர்களை உருவாக்கினர்.( மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் உட்பட)ஆனால் இவர்கள் அவர்களினது சமூகம் சார்ந்த செயற்பாடுகளிலே கூடுதல் கரிசனை செலுத்தினர்.
அதன்பின் அம்பாறை மாவட்டம் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டதன் பின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல பூர்வீக தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டு இன்று முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல ஆலயங்கள் உடைக்கப்பட்டு பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவையாவன நிந்தவூர், அட்டப்பள்ளம் திராய்க்கேணி, மீனோடைக்கட்டு, மாணிக்கமடு, மாட்டுப்பளை, கரவாகு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இதில் கரவாகு எனும் பூர்வீக தமிழ்கிராமத்தினை மையமாக வைத்தே கல்முனைத் தொகுதிக்கான கிராம சபைகள் உருவாக்கப்பட்டன. அவை கரவாகு வடக்கு (மருதமுனை பெரியநீலாவனை) கரவாகு தெற்கு (சாய்ந்தமருது) கரவாகு மேற்கு (நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு) மற்றும் கரவாகு நகர்ப்பகுதி என உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்தக்கரவாகு எனும் தமிழ்க் கிராமத்தில் இருந்த தமிழ்மக்களும் அங்கு இருந்த மூன்று ஆலயங்களும். பாடசாலையும் எங்கே என கேட்கவேண்டியுள்ளது. இவ்வாலயங்கள் அமைந்துள்ள இடம் இன்று பள்ளிவாசல்களாகவும் எரிபொருள் நிரப்பு நிலையமாகவும் இருக்கின்றது. தமிழ்கலவன் பாடசாலை இன்று ஒரு இனத்தின் பெயர் கொண்டு பிரபல கல்லூரியாக திகழ்கின்றது.(இந்நிகழ்வுகள் யாவும் தமிழ்சினிமாவில் வரும் அத்திப்பட்டிக்கிராமமாக அழிந்து விட்டது)
இங்கிருந்த தமிழ்மக்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளின் அடாவடத்தனத்தினாலும், கபடச்செயற்பாடுகளினாலும் பூர்வீக மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் ஆலயங்களும் அழிக்கப்பட்டன. அந்தக்கால கட்டத்தில் விடுதலை போராட்டமோ அல்லது பயங்கரவாத செயற்பாடுகளோ இருந்ததில்லை.
பின்னர் இப்பகுதி கல்முனைக்குடியாக மாற்றம் பெற்று தற்போது அதனை கல்முனையாக காட்ட முனைவதன் மறுமம் என்ன? இப்பகுதி காணிகளின் மூன்றாம்இ நான்காம் உரிமையாளர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்பாடுகளுக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளால் பொறுப்புக்கூற முடியுமா அல்லது பரிகாரம்தான் தரமுடியுமா?
29கிராம சேவையாளர் பிரிவைக் கொண்டு இயங்கும் இப்பிரதேச செயலகமானது 1989.01.12.ஆம் திகதி எம்/எச்/ஏ-/6/89ஆம் இலக்க கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட இவ் உதவி அரசாங்க அதிபர் பிரிவானது 1989.03.31ஆம் திகதி அன்று மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களாலும் இன்றும் எம்மத்தியில் வாழும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களாலும் மற்றும் ஏனையவர்களான பீ.தயாரெத்ன. பீ.ரெத்னாயக்கா. ஏ.அமிர்தலிங்கம். எஸ்.கலபதி. நிசாம்பக்மீவ. ரீ.திவ்வியநாதன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடல்களின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும்.
இதன்பிற்பாடு 1993.07.28 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி வெருகல். ஒட்டிசுட்டான். காரைதீவு மற்றும் கல்முனை த.பி உட்பட 28 உப அலுவலகங்களாக இருந்தவற்றை தரமுயர்த்ததுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்று ஏனைய அனைத்தும் தரமுயர்த்தப்பட்ட நிலையில் கல்முனை தமிழ்பிரதேசம் மாத்திரம் தரமுயர்த்தப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தலைவரின் கனவை நனவாக்குவதாக அடிக்கடி கூச்சலிடும் இவ்வரசியல்வாதிகள் பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களால் இனஒற்றுமை குறித்து இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என நினைப்பை மதிக்காததன் மர்மம்தான் என்ன? என்பதனை இவர்களால் வெளிப்படையாக தெளிவுபடுத்த முடியுமா?
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் விவசாயத்திற்குத்தான் முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றார்கள் அதுபோன்றுதான் இந்த நாட்டின் ஜனாதிபதியின் சிந்தனையில் உருவான மகிந்த சிந்தனையிலும் கூட தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்பிரதேசம் அதிகளவில் விவசாயிகளையும், மீன்பிடிப்பாளர்களையும் கொண்ட பிரதேசமாகும் இதனை புரிந்து கொள்ளாதவர்கள் குளங்களை மண்போட்டு நிரப்பி மாடமாளிகைகளை கட்ட நினைக்கின்றார்கள். இதற்கு கல்முனை வாழ் தமிழர்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கல்முனை நகரை ஓர் இனத்திற்குச் சொந்தமான முகப்பு வெற்றிலை எனக்கூறும் இவர்களது கபடத்தனமான செயற்பாடு நகைப்பிற்குரிய விடயமாகும்.
கல்முனை நகரின் தமிழரின் வீதாசாரத்தினை குறைத்து ஒரு இனத்தின் அடையாளம் சார்ந்ததாக எந்தஒரு செயற்பாடுகளையும் யார் முன்னெடுத்தாலும் அது அவர்களது பகல்கனவாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்படுவதற்கு எவ்வித தியாகத்தையும் செய்வதற்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் தயாராக உள்ளோம் என்பதுடன் அனைத்துத் தமிழ் மக்களையும் இணைத்து அரசிடம் நியாயம் கேட்பதற்கு பின்னிற்க மாட்டோம். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி அவர்களையும் சந்தித்து பேசுவதற்கு தயாராகவுள்ளோம் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
நாட்டில் யுத்தமில்லாத இக்காலப்பகுதியில் தமிழ்- முஸ்லிம் மக்கள் அன்னியொன்னியமாக நடந்ததை மறந்து வாழ எத்தனிக்கும் இன்னேரத்தில் அரசினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவுள்ள இத்தரமுயர்த்தலை அரசியல் இருப்பைத் தக்கவைப்பதற்காக தமிழ்-முஸ்லிம் உறவை சீர்குலைக்க சில கீழ்த்தரமான அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கும் இச்செயற்பாட்டை வன்மையாகக்கண்டிப்பதுடன், முஸ்லிம் மக்கள் இது குறித்து சிந்தித்து செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad