சல்மான் குர்ஷித் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 15, 2013

சல்மான் குர்ஷித் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

(vi)

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கமும், சிறுபான்மை மக்களும் புரிந்துணர்வுடன்;  செயல்படுவது அவசியமென இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் சந்தித்து கலந்துரையாடிய அக் கட்சியின் உயர்மட்ட குழுவினரிடம் தெரிவித்தார். 
அத்துடன் இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து இந்திய அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். 
 
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கு பற்றாத நிலையில், அதில் கலந்து கொள்ளும் அந் நாட்டுத் தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கி இங்கு வருகை தந்துள்ள வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவினரை நேற்று இரவு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உரையாடினார். 
 
அமைச்சர் குர்ஷித்துடன் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங், இலங்கைக்கான அந் நாட்டுத் தூதுவர் வை.கே. சிங்ஹா, இந்திய பிரதி தூதுவர் குமரன் ஆகியோரும், அமைச்சர் ஹக்கீமுடன் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர். 
 
13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது மிக முக்கியமானது இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.
வடகிழக்கின் காணி விவகாரம், மீனவர்கள் தொடர்பான விடயங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் என்பன பற்றியும் பரஸ்பரம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 
 
இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தரப்பினர் சிறுபான்மை சமூகங்கள் குறித்த விடயங்களில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதைப் போன்றே, இந்தியாவிலும் தமிழ் நாட்டின் அழுத்தம் அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார். 
 
இந்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் அண்மையில் மேற்கொண்ட முன்னைய இலங்கை விஜயத்தின் போதும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post Top Ad