மன்மோகன் இலங்கை வந்தால் கிழக்குக்கும் அழைப்பு விடுக்கப்படும் ; முதலமைச்சர் நஜீப் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

மன்மோகன் இலங்கை வந்தால் கிழக்குக்கும் அழைப்பு விடுக்கப்படும் ; முதலமைச்சர் நஜீப்


காமன்வெல்த் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன் மோகன்சிங் இலங்கைக்கு வருகை தந்தால் கிழக்கு மாகாணத்திற்கும் வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கூறுகின்றார்.


வடமாகாண முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு விடுத்துள்ள அழைப்பை வரவேற்றுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், கிழக்கு மாகாணத்திற்கும் அவர் வருகை தர வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் கூறுகின்றார்.

அவரது இலங்கைக்கான வருகை இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படாததன் காரணமாகவே கிழக்கு மகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்புகள் எதுவும் தான் இதுவரை விடுக்கவில்லை.

அவரது வருகை உறுதிப்படுத்திய பின்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போருக்கு பின்னரான வட மாகாண நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்கு வருமாறு இந்திய பிரதமருக்கு வடமாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளது போல் கிழக்கு மாகாண முதலமைச்சரும் விடுத்திருக்க வேண்டும் என்கிறார் கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவரான சி. தண்டாயுதபாணி.

இந்திய பிரதமரின் வடமாகாணத்திற்கான வருகையின் மூலம் மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புடன் அந்த அழைப்பை அவர் விடுத்திருக்கலாம் என தான் கருதுவதாகவும அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை இந்திய உதவியுடனான சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் காரணமாக தமது பூர்வீக நிலங்களையும் வாழ்விடங்களையும் இழந்துள்ள சம்பூர் பிரதேச மக்கள் தொடர்பாகவும் அவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் இந்தியா கவனம் செலுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது என்றும் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சி. தண்டாயுதபாணி, இந்தியப் பிரதமரை கிழக்கு மாகாணத்திற்கும் வருகை தருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க வேண்டும் என்கிறார்.

கிழக்கு மாகாண மக்களினது வாழ்வாதரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அது பெரிதும் உதவுவதாக அமையும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஏற்கனவே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மன்மோகன் சிங்கை வட மாகாணத்திற்கு வருகை தருமாறு அவருக்கு எழுதிய கடிதமொன்றின் மூலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டால் வடமாகாணத்திற்கும் செல்லக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை போருக்குப் பின்னர், கிழக்கு மாகாண சபையின் செயல்பாடுகளுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இந்தியா பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் உதவிகளை வழங்கியுள்ளது.

குறிப்பாக ரயில் பஸ், பயணிகள் பஸ் போக்குவரத்து, இந்திய வீடமைப்பு மற்றும் விதவைகள் புனர்வாழ்வு போன்ற நலத்திட்டங்களும் இதில் அடங்கும்.

(பிபிசி) 

No comments:

Post Top Ad