அமெரிக்க கடற்படையின் இணையதளம் பலமணி நேரம் முடக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 03, 2013

அமெரிக்க கடற்படையின் இணையதளம் பலமணி நேரம் முடக்கம்


சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இதற்கு தக்க பாடம் புகட்டும்விதமாக சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க அரசு முடிவெடுத்தது. ஆயினும், இவர்களின் நட்பு நாடான இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போருக்கு எதிராக வாக்களித்ததால் அமெரிக்கா தனியாக இதனை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது. அந்நாட்டிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்மதத்திற்காக அமெரிக்க அரசு காத்திருக்கின்றது.

இதனிடையில் அமெரிக்க கடற்படையினரின் வர்த்தக வேலைவாய்ப்புத் தளம் ஒன்று சிரியாவின் எலெக்ட்ரானிக் படை என்ற ஒரு அமைப்பால் நேற்று பல மணி நேரம் முடக்கப்பட்டது. அவர்களால் வெளியிடப்பட்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட செய்தி மட்டுமே அந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியானது.

இந்த அமைப்பு ஆறு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களில் உள்ள வாசகங்கள் சிரியாவில் இருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்காக நான் போராடமாட்டேன் என்று கையினால் எழுதப்பட்டிருந்தது. இதன்மூலம் சிரியா அரசை எதிர்த்து அல்கொய்தா தீவிரவாதிகள் போரிட்டுக் கொண்டிருப்பதை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்கா, சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி தீவிரவாதம்தான் என்றும், சிரியாவின் துருப்புகள் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுபவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், சமூக இணையதளமான டுவிட்டர் மற்றும் பல ஊடக தளங்களையும் முடக்கியதற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எஸ்.ஈ.ஏ. தெரிவித்துள்ளதாக சீனப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் இணையதளப் பிரிவு இதனால் பாதிக்கப்படவில்லை என்று கடற்படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் எரிக் பிளானகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad