சிரியா மீது தாக்குதல் உறுதி - காலாட்படையை களமிறக்கும் திட்டமில்லை: ஒபாமா பேட்டி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, August 31, 2013

சிரியா மீது தாக்குதல் உறுதி - காலாட்படையை களமிறக்கும் திட்டமில்லை: ஒபாமா பேட்டி


சிரியா மீது எந்த வகையான தாக்குதல் நடத்துவது என்பது தொடர்பாக நான் இன்னும் முடிவு செய்யவில்லை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.


சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் பதவி விலக மறுக்கும் அவர் போராட்டக்காரர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறார். அதில், சுமார் 1 லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். 7 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கசின் புறநகரமான கவுட்டா மற்றும் மொடமியே பகுதிகளில் சிரியா ராணுவம் கடந்த 21-ம் தேதி ரசாயன குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதில் இருந்து வெளியான நச்சு புகையில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 1300-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற போர் மேகம் சூழ்ந்துள்ள வேளையில் அந்நாட்டின் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சிரியா பிரதமர் வயெல் அல்-ஹல்கி, 'அமெரிக்காவில் தொடங்கி அனைத்து மேற்கத்திய நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா? என்று தேடி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக சில காட்சியமைப்புகளை உருவாக்கவும் சிலர் துடிக்கின்றனர்.

எங்கள் மீது தாக்குதல் நடத்த நினைத்தால் 1973ல் யோம் கிப்பூர் போரின் போது கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை இப்போதும் அளித்து எங்களை தாக்க நினைப்பவர்களின் சுடுகாடாக சிரியாவை மாற்றுவோம்' என்று அவர் கூறினார்.

எனினும், அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்று குவித்த சிரியாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

சிரியா மீது தாக்குதல் நடத்த தனது நெருங்கிய நட்பு நாடான இங்கிலாந்துடன் பேசி போர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிபர் ஒபாமா தெரிவித்தார். இதுகுறித்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு செய்தார்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் டேவிட் கேமரூன் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. டேவிட் கேமரூனின் தீர்மானத்துக்கு எதிராக 285 எம்.பி.க்களும் ஆதரவாக 272 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 13 ஓட்டு வித்தியாசத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் தோல்வியடைந்தது.

இதை தொடர்ந்து சிரியா மீதான அமெரிக்க தலைமையிலான தாக்குதலில் இங்கிலாந்து தலையிடாது என டேவிட் கேமரூன் நேற்று அறிவித்தார். இங்கிலாந்தின் துணை இல்லாமல் போனாலும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே நேற்று அறிவித்தார் அமெரிக்கா தங்கள் மீது தனித்தே கூட தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி சிரியா மக்களிடையே நிலவி வருகிறது.

இதற்கிடையில், சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் 426 குழந்தைகள் உள்பட 1429 பேர் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என அமெரிக்க ராணுவ மந்திரி ஜான் கெர்ரி கூறியுள்ளார்.

இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:-

எங்கள் கூட்டு நாடுகளுடனும் அமெரிக்க காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். அப்பாவி குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவில் நடைபெற்ற ரசாயன ஆயுத தாக்குதல் சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர். போர்களில் கூட இவ்வகை ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என மனித நேயம் மிக்க 99 சதவீதம் மக்கள் கூறுகின்றனர். ஆனால், மனிதநேயத்தை மீறி நடத்தப்பட்ட தாக்குதலின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், நாம் தவறான சிமிக்ஞையை அனுப்புகிறோம் என்ற அர்த்தமாகி விடும்.

அந்த சிமிக்ஞை நமது நாட்டின் பாதுகாப்புக்கே கூட அச்சுறுத்தலாக அமைந்துவிடும். இந்த விவகாரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏராளமான மக்கள் கருதுகின்றனர். ஆனால், யாருமே, எதுவும் செய்ய முன்வரவில்லை.

சர்வதேச விதிமுறைகளை மீறிய வகையில் சிரியாவில் நடைபெற்றுள்ள ரசாயன தாக்குதல் சிரியாவின் அண்டை நாடுகளும், நமது நட்பு நாடுகளுமான இஸ்ரேல், துருக்கி, ஜோர்டான் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதுடன் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக உள்ளது.

சிரியாவில் உள்ள ரசாயன தீவிரவாதிகள் கையில் சிக்கினால் விளைவுகள் விபரீதமாகி விடும். சிரியாவின் ரசாயன ஆயுத குவியலுக்கு ராணுவ தாக்குதலின் மூலமாக மட்டுமே விடையளித்துவிட முடியும் என நான் நம்பவில்லை.

காலாட்படைகளை களமிறக்குவது தொடர்பாக நாங்கள் ஆலோசிக்கவில்லை. சிரியா மீது எந்த வகை தாக்குதல் நடத்துவது என்பது தொடர்பாக இன்னும் நான் இறுதி முடிவு எடுக்கவில்லை'

இவ்வாறு அவர் கூறினார்.

ஒபாமாவின் கருத்தின்படி, காலாட்படைகளை களமிறக்கி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களை பலி கொடுத்ததை போல் சிரியாவிலும் பலி கொடுக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனினும், அதிரடியாக வான்வழி தாக்குதல்கள் நடத்தி சிரியாவின் ரசாயன ஆயுத கிடங்குகளை அமெரிக்கா அழிக்கக்கூடும் என போர் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post Top Ad