பொது பல சேனா என்பது 'பௌத்த சக்தியின் இராணுவம்' - அவுஸ்ரேலிய ஊடகம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, August 29, 2013

பொது பல சேனா என்பது 'பௌத்த சக்தியின் இராணுவம்' - அவுஸ்ரேலிய ஊடகம்


[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் THE MONKS’ ARMY என்னும் இரண்டாம் பகுதி இது.இதனை  மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி] 


முதல்பகுதியை படிக்க: http://www.newmuthur.com/2013/08/blog-post_1853.html

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரித்தானிய கொலனித்துவ ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவானது 'சிலோன்' என அழைக்கப்பட்டது. கொழும்பில் கொலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட வீதிகள் மற்றும் தொடருந்துப் பாதைகள் என்பன தற்போது நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. 

போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் தற்போது இந்திய பொறியியலாளர்களின் உதவியுடன் தொடருந்துப் பாதை மீளவும் புனரமைக்கப்படுகின்றது. இத் தொடருந்துப் பாதையின் ஊடாக கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். பின்னர் போர்க் காலத்தில் இந்தச் சேவையானது தடைப்பட்டது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான தென் சிறிலங்காவில் காணப்படும் அம்பாந்தோட்டையில் தற்போது மிகப் பெரிய முதலீட்டுடன் கட்டுமானத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது 1.5 பில்லியன் அமெரிக்க டொலரில் அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம், அனைத்துலக விமானநிலையம் மற்றும் துடுப்பாட்ட விளையாட்டரங்கு போன்றன அமைக்கப்பட்டு இவற்றுக்கு அதிபர் ராஜபக்சவின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அத்துடன் அம்பாந்தோட்டையில் கருத்தரங்கு மண்டபம் மற்றும் திரையரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான மிகப் பெரிய முதலீடுகளை சீன அரசாங்கமே மேற்கொண்டு வருகிறது. சிறிலங்காவில் இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் சீனாவானது தனது 'முத்துமாலைத்' திட்டத்தைப் பலப்படுத்துவதைப் பிரதான நோக்காகக் கொண்டுள்ளது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவானது தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக வரைந்துள்ள முத்துமாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது சிறிலங்காவில் தனது தளத்தைப் பலப்படுத்தி வருகிறது. 

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக ரீதியாக மேற்குலக சக்திகளின் தலையீடுகளைத் தடுத்து நிறுத்துவதே இந்த முத்துமாலை மூலோபாயத்தின் பிரதான நோக்காகும். அம்பாந்தோட்டைத் திட்டங்களுக்கு சீனா தனது நிதி முதலீட்டை மேற்கொண்டுள்ள அதேவேளையில், இவற்றை அமைப்பதற்காக சீனப் பணியாளர்களைப் பயன்படுத்துகிறது. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. 

கொழும்பில் சீன நிறுவனங்களின் உதவியுடன் டுபாய் பாணியில் 'துறைமுக நகரம்' ஒன்று கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு நவம்பரில், பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாடானது சிறிலங்காவின் கொழும்பில் நடைபெறத் திட்டமிட்டுள்ள நிலையில் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் ராஜபக்ச அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுக்கான காட்சிப்படுத்தல்களாகக் காணப்படும். 

கொழும்பானது ஆசிய நாடுகளின் தலைநகரங்களில் முற்றாக அபிவிருத்தியடையாத ஒன்றாக காணப்படுகின்ற போதிலும், ராஜபக்சவுடன் நெருக்கமான வர்த்தக சமூகமானது இரவலாகப் பணத்தை வழங்குகின்றன. கொழும்பில் தற்போது பல விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உயரமான கட்டடங்களும் புதிதாக முளைத்துள்ளன. இவ்வாறான அபிவிருத்திகள் மூலம் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்த முடியும் என சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பெக்கரால் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் கொழும்பில் மிகப் பெரிய விடுதி ஒன்றை அமைக்கப்படுகிறது. 

கொழும்பின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள Sri Sambuddhathva Jayanthi Mandiraya என்கின்ற மிகப் பெரிய விகாரையானது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கின்றது. இதனுடன் செயலக வளாகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது. இது 2011ல் அதாவது சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் திறக்கப்பட்டது. இந்த வளாகமானது பௌத்த அடையாளங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்த வளாகத்தின் நுழைவாயிலில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 'பொது பால சேன' என்கின்ற பௌத்த தீவிரவாதக் குழுவின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது யூலை 2012ல் உருவாக்கப்பட்டது. 

பொது பல சேன என்பது 'பௌத்த சக்தியின் இராணுவம்' என மொழிபெயர்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அரசியல்வாதிகளின் துணையுடன் உருவாக்கப்பட்ட பொது பல சேன, ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்டது. அதாவது சிறிலங்காவின் மிகப் பிரதான மதக் கட்சியான ஜாதிக கெல உறுமய மிதவாத சக்தியாகச் செயற்படுவதைக் காரணங் காட்டியே பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாதக் குழு உருவாக்கப்பட்டது. 

இதிலிருந்து பொது பல சேன அமைப்பானது தான் சிறிலங்காத் தீவில் பௌத்தத்தைப் பாதுகாக்கின்ற உண்மையான ஒரு பாதுகாவலன் எனத் தன்னைத் தானே உரிமை கோரிக் கொண்டது. சிறிலங்காவில் தற்போது அமைதி நிலவினாலும் கூட, சிங்கள பௌத்த பேரினவாதிகள் பொது பல சேனவின் கருத்திற்கு மதிப்பளிக்கின்றனர். அதாவது சிறிலங்காத் தீவும் பௌத்தமும் ஒருபோதும் ஆபத்தைச் சந்திக்கக் கூடாது என்பது இந்த அமைப்பின் கருத்தாகும். 

விழிப்புணர்வை வழங்குகின்ற, மதக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்ற பொதுபல சேனவானது முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்களைக் குறிவைத்து தாக்குதலை மேற்கொள்கின்றது. முஸ்லீம் புனித தலங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதலை மேற்கொள்கின்றது. இதில் சிறிலங்கா காவற்துறையினர் சிறிதளவில் தலையீடு செய்கின்ற போதிலும், பொது பல சேனவானது அதனையும் எதிர்த்து தனது நடவடிக்கையை மேற்கொள்கிறது. 

சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் அடிப்படை மத மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில், முஸ்லீம் வைத்தியர்கள் சிங்களப் பெண்கள் கரித்தரிக்காது இருப்பதற்கான மருத்துவத்தைச் செய்வதாகவும் பொதுபல சேன குற்றம் சாட்டுகிறது. பௌத்த மதத்தைத் திரிவுபடுத்தி கத்தோலிக்கர்கள் தமது மதத்தைப் பரப்புவதற்காக பரப்புரைகளில் ஈடுபடுவதாகவும் பொதுபல சேன தேவாலய நிர்வாகங்களை எச்சரித்துள்ளது. 

பொதுபல சேன அமைப்பானது 'தீவிரவாத அமைப்பு' என சிறிலங்காவின் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விபரித்துள்ளார். "சிங்கள சமூகத்தின் கல்வியறிவற்ற கீழ்த்தர சமூகத்திலிருந்து தோற்றம் பெற்ற ஒரு இனவாத-மதவாத பாசிச அமைப்பே பொதுபல சேன" என சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரியான டயான் ஜெயதிலக முத்திரை குத்தியுள்ளார். இந்த அமைப்புத் தொடர்பான தமது விசனத்தை தமிழ்த் தலைவர்களும் முன்வைத்துள்ளனர். 

"இது ராஜபக்ச அரசாங்கத்தால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு என நான் கருதுகிறேன். இந்த அரசாங்கத்தை விட சிங்கள –பௌத்த தீவிரவாத அமைப்பொன்றை எம்மால் அடையாளப்படுத்த முடியாது என நான் கருதுகிறேன். இந்நிலையில் பொதுபல சேன என்கின்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பானது சிறிலங்கா அரசாங்கத் தரப்பிலிருந்து தீடீரெனத் தோற்றம் பெற்றுள்ளது. தற்போது ராஜபக்ச அரசாங்கமானது பார்ப்பதற்கு மிதவாதி போல் தென்படுகிறது" என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும் போரால் அழிவுற்ற வடக்கு கிழக்கில் செயற்படும் செயற்பாட்டாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். 

போருக்குப் பின்னான சிறிலங்காவில் பௌத்த ஆயுதக் குழுவொன்று தோற்றம் பெற்றுள்ளது. பர்மா மற்றும் தென்கிழக்காசியாவில் போர் நடைபெற்ற நாடுகளில் இடம்பெற்ற சீர்திருத்தச் செயற்பாடுகளைப் பிரதிபலிப்பதாகவே பொதுபல சேனவின் செயற்பாடுகளும் உள்ளன. 

கொலனித்துவ ஆட்சிக் காலத்தின் பின்னர் சிறிலங்காவை ஆண்ட தலைவர்களில் பிரபலமான சொலமன் பண்டாரநாயக்க 1959ல் புத்தபிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார். அதாவது சிங்களம் பேசும் பெரும்பான்மை மக்களின் மக்களின் நலன்களைத் திருப்திப்படுத்தும் விதமாக பண்டாரநாயக்க சிங்கள ஆதரவுக் கோட்பாடுகளை உருவாக்காது, சிங்களவர்களுக்கு இவர் துரோகமிழைத்ததாகக் கருதியே புத்த பிக்கு ஒருவரால் இவர் படுகொலை செய்யப்பட்டார். 

பொதுபல சேனவின் பிரதம நிறைவேற்று இயக்குனரும் இதன் பௌத்த தலைமைத்துவக் கல்லூரியின் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டிலன்ந்த விதனேஜ்ஜை ((Dilanthe Withanage) The Global Mail ஊடகமானது இந்த அமைப்பின் செயலகம் ஒன்றில் சந்தித்தது. தனது 40வது வயதுகளில் உள்ள விதனேஜ் ஆங்கிலம் மற்றும் ரஸ்ய மொழிகளில் உரையாடினார். "இந்த நாட்டில் பௌத்தம் பாதுகாக்கப்படவில்லை என நாம் உணர்ந்தோம். அத்துடன் பௌத்தர்கள் உள்நாட்டிலும், அனைத்துலகிலும் மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்கின்றார்கள். இதனாலேயே பௌத்தத்தையும் பௌத்தர்களையும் பாதுகாப்பதற்காக நாங்கள் பொது பல சேன என்கின்ற இந்த அமைப்பை உருவாக்கினோம்" என விதனேஜ் கூறினார். சிறிலங்கர்களில் 75 சதவீதத்தினர் தம்மை பௌத்த சிங்களவர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்கா அரசாங்கத்தின் குறிப்பாக அதிபர் ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாயவின் உருவாக்கமே பொதுபல சேன எனப் பெரும்பாலான சிறிலங்கர்கள் நம்புகின்றனர். சிறிலங்காவில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத, முன்னாள் போர் வீரரும், 2009 வரை தமிழ்ப் புலிகளை அழிப்பதற்கான போருக்குக் கட்டளை வழங்கியவருமான கோத்தபாய ராஜபக்ச தற்போது நாட்டின் பாதுகாப்புச் செயலராக பணிபுரிகிறார். பொது பல சேனவுடன் தனக்கு தொடர்பு உள்ளது என்கின்ற குற்றச்சாட்டை கோத்தபாய நிராகரித்துள்ளார். 

மும்பையைத் தளமாகக் கொண்டியங்கும் சிவ சேன அமைப்பு மற்றும் இந்திய தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் நிழலாகச் செயற்படும் தேசிய இந்துத் தீவிரவாத நாட்டுப்பற்றாளர் அமைப்பான Rashtriya Swayamsevak Sangh போன்றவற்றின் செயற்பாடுகளை ஒத்ததாக பொதுபல சேன காணப்படுகிறது. 

இவ்வாறான ஒப்பீடுகளை பொதுபல சேனவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விதனேஸ் மறுக்கிறார். "நாங்கள் எந்தவொரு அரசியற் செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை" என இவர் கூறுகிறார். 

சிறிலங்கா அதிபரின் அதிகாரம் மிக்க சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ச, பொதுபல சேனவை உருவாக்குவதற்குக் காரணமாக இல்லை என்றால், மார்ச்சில் காலியில் இடம்பெற்ற இதன் உத்தியோகபூர்வத் திறப்பு விழாவில் கலந்து கொண்டது ஏன் என்கின்ற கேள்வி நிலவுகிறது. 

சிறிலங்காவின் தென் துறைமுக நகரான காலியில் பெருமளவான முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர். "பௌத்த கலாசார மையத்திற்கு ஜேர்மனியர் ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக கோத்தபாய இங்கு வந்திருந்தார். இந்த வசதி வாய்ப்பைப் பயன்படுத்தி இதனை ஒரு பயிற்சி மையமாக மாற்ற நாம் தீர்மானித்தோம்" என விதனேஜ் கூறுகிறார். 

"ஜேர்மனி நண்பரான' Michael Kreitmeir எவ்வாறு பொதுபல சேனவுக்கு உதவினார் என்பதை அறிவதற்காக The Global Mail ஊடகம் அவரைச் சந்தித்தது. தனது தொண்டு நிறுவனமான Little Smile இன் ஒரு பகுதியாக 2007ல் காலியில் Meth Sevena’ என்கின்ற மத மையம் ஒன்று உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இதன் உரிமை தனக்கு மறுக்கப்பட்டதால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொழும்பிலுள்ள பௌத்த கலாசார மையத்தை தான் அணுகியதாக மைக்கேல் கிறெய்ற்மெயர் என்கின்ற ஜேர்மனியர் கூறினார். ஆனால் இந்தப் பிரச்சினையுடன் பொதுபல சேன தொடர்புபட்டுள்ளது என்பதை தான் அறிந்தபோது தான் அதிர்ச்சியுற்றதாகவும், பின்னர் இத்திட்டத்தை திறந்து வைப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டதானது தனக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் இவர் கூறினார். "ஒருபோதும் பொது பல சேனவின் மையமாக இருக்க முடியாது" என கிறெய்ற்மெயர் குறிப்பிட்டார். 

இவ்வாண்டின் ஆரம்பத்தில், இஸ்லாமியர்கள் தமது மத வழிகாட்டலுக்கேற்ப மிருகங்களைப் பலியிடுதல் மற்றும் 'ஹலால்' முத்திரை குத்தப்பட்ட உணவுகள் விற்கப்படுதல் போன்றன தொடர்பில் சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும், கொழும்பு பொது அமைப்புக்களின் முதன்மையான பிரதிநிதியுமான மிலிந்த மொறகொட சிங்கள இஸ்லாமியத் தலைவர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற ஒரு கருத்தரங்கு ஒன்றை நடாத்துவதற்கு வழிவகுத்தார். இதில் முஸ்லீம் மற்றும் பௌத்த தலைவர்கள் வெளிப்படையாகத் தமது கைகளை ஒன்று சேர்த்து ஒற்றுமையைக் காட்டினர். 

ஆனால் இந்தக் கருத்தரங்கின் பின்னர் பொது பல சேனவானது 'ஹலால்' உணவுப் பொருட்கள் மீது தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியதுடன், "பௌத்தத்தின் புனிதத்தை மிலிந்த மொறகொட களங்கப்படுத்துவதுடன், புனிதமான பிக்குகளின் கருத்துக்களை அழிக்க முற்படுவதாகவும்" குற்றம் சுமத்தியது. 

"பௌத்த மதத்தை கடைப்பிடிக்கின்றவன் என்ற வகையில், உண்மையான பௌத்தமானது நடுநிலையானது. அதாவது விட்டுக்கொடுப்புக்கள் சகிப்புத்தன்மை போன்றவற்றைக் கூறுகின்றது. இவ்வாறான ஒரு பௌத்தத்தையே நான் பின்பற்றுகிறேன். விட்டுக்கொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை உபதேசித்த புத்த பெருமான் தீவிரவாதத்தை எதிர்த்தார். ஒரு புனிதமான மதத்தைக் காப்பாற்றுபவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்ள வேண்டிய தேவையில்லை" என மிலிந்த மொறகொட The Global Mail ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 

"மதம் என்பது தனிப்பட்ட விடயம்" என விதனேஸ் கூறினார். ஆனால் அண்மைய சில மாதங்களாக விதனேஜ்ஜின் பொது பல சேனவானது வெளிப்படையாக மத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 

ஜனவரியில், கொழும்பின் தெற்கிலுள்ள, பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் சிறிலங்காவின் மிகப் பெரிய நிறுவனமான 'ஜோன் கீல்ஸ்' நிறுவனத்தின் விடுதி ஒன்றில் விருந்தொன்றை வைப்பதென பொது பல சேனவின் தலைமைப்பீடம் தீர்மானித்திருந்தது. 

'கீல்ஸ்' என்கின்ற இந்த நிறுவனமானது பல்துறை சார் வர்த்தக நிறுவனமாகும். அதாவது தகவற் தொழினுட்பம், வங்கிகள், தேயிலைத் தோட்டங்கள், விடுதிகள், வர்த்தகம் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் தனது கால்களைப் பதித்துள்ளது. இது ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவுடன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது. 'கீல்ஸ்' நிறுவனத்தின் தலைவரான சுசந்த ரட்ணாயக்க உள்ளார். 

'ஹலால்' உணவு முறைமை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக மொறகொடவால் எடுக்கப்பட்ட முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் பங்குகளை 'கீல்ஸ்' நிறுவனம் கொண்டுள்ளது. இங்கு பரிமாறப்படும் உணவுக் கையேட்டில் விடுதியானது 'நிர்வான' எனப் பெயரைப் பயன்படுத்தியிருந்தது. இந்த விடுதியானது மத உணர்வுகளைக் காயப்படுத்துவதாக குற்றம் சாட்டிய பொது பல சேன புத்த பகவான் பயன்படுத்தி நிர்வான என்ற பதத்தை உணவுக்குப் பயன்படுத்தியதாகவும் கூறியதுடன் மட்டுமல்லாது, செம்மஞ்சள் நிற உடையணிந்த இராணுவப் பிக்குகள் பொது பல சேனவின் பொதுச் செயலர் கலாகொட அத்தே ஞானசார தலைமையில் விடுதியை முற்றுகையிட்டதுடன், விடுதி முகாமையாளர் காவற்துறையால் விசாரிக்கப்பட்டார். 

"இந்த விடுதியில் வழங்கப்படும் மதுபானம், நடனம் மற்றும் ஏனையவை வரவேற்கத்தக்கது. ஆனால் 'நிர்வான' என்ற பெயரில் உணவுப் பட்டியலை அவர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள்? இதனை புத்தர் மிகப் பொருத்தமாகவே பயன்படுத்தியிருந்தார். நாங்கள் எந்தவொரு மதத்தையும் மதிக்கிறோம். இந்தப் பதத்தை விடுதியொன்றில் பயன்படுத்த முடியாது" எனவும் விதனேஜ் தெரிவித்திருந்தார். 

சிறிலங்காவின் உத்தியோகபூர்வ மதமாக பௌத்தம் இருக்க வேண்டும் என பொது பல விரும்புகிறது. 1978ல் நிறைவேற்றப்பட்டு தற்போதும் நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பின் பிரகாரம், சிறிலங்காவானது தனது குடிமக்கள் தமக்கு விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான அனுமதியை வழங்குகிறது. ஆனால் இந்த அரசியல் யாப்பின் பெரும்பாலான இடங்களில் பௌத்தம் என்கின்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இந்துமதம், இஸ்லாம் மற்றும் கிறீஸ்தவம் தொடர்பாக இங்கு குறிப்பிடப்படவில்லை. பௌத்தமதமானது 1815ல் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சி சிறிலங்காவில் தொடரப்படுவதற்கு முன்னர் தோன்றிய மதமாகக் காணப்படுவதாக பொதுபல சேன கூறுகிறது. 

"பிரித்தானிய கொலனித்துவ காலத்தின் முன்னர் சிறிலங்காவில் நாம் எவ்வாறான வாய்ப்புக்களைக் கொண்டிருந்தோமோ அவை எல்லாம் எமக்கு மீளக்கிடைக்க வேண்டும் என நாம் நினைக்கிறோம்" என விதனேஸ் தெரிவித்துள்ளார். 

பல நூற்றாண்டுகளாக சிறிலங்காவில் பெரும்பாலான மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியிருந்தார்கள். இன்று சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 15 சதவீதத்தினர் தமிழ் மக்களாக உள்ளனர். கிறிஸ்துவுக்கு முன் 4ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்துப் புராணமான இராமாயணத்தில் சிறிலங்காவில் எப்போது இந்து மதம் தோன்றியது என்பது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1624ல் போர்த்துக்கேயரால் முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாண இராச்சியத்தின் அரச மதமாக இந்துமதம் காணப்பட்டது. 

ஆனால் இந்தக் கருத்தை பொதுபல சேன வரலாற்றுத் தகவல்களில் அறிந்தது போல் தெரியவில்லை. சிறிலங்காவில் இந்துமதமானது இரண்டாம் மதமாகவே காணப்படுவதாக விதனேஜ் கூறுகிறார். "சிறிலங்காவுக்கு பிரித்தானியர் வருவதற்கு முன்னர், பௌத்தமானது அரச மதமாகக் காணப்பட்டது. இதனால் தற்போது மீண்டும் பௌத்தம் உத்தியோகபூர்வமாக அரச மதமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்" என விதனேஜ் வலியுறுத்துகிறார். 

நாங்கள் விதனேஜ் உடன் உரையாடிக் கொண்டிருந்த போது உயரமான 40வயது மதிக்கத்தக்க ஒருவரும் கலந்து கொண்டார். பொது பல சேன அமைப்பின் பொதுச் செயலரான கலகொட அத்தே ஞானசாரா என விதனேஜ் அவரை அறிமுகப்படுத்தினார். இவர் இந்த அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவராவார். சிறிலங்காவில் பௌத்த மதத்திற்கு எவ்வாறான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பது தொடர்பாக அவர்கள் இருவரும் எமக்கு விளக்கினர். 

சிறிலங்காவி;ன மொத்த சனத்தொகையான 20 மில்லியன் மக்களில் 75 சதவீதமான சிங்கள பௌத்தர்கள் வாழும் ஒரு நாட்டில் எவ்வாறு பௌத்தமதம் அச்சுறுத்தலுக்கு உட்படுவதாக கருதுவதாக நான் அவர்களிடம் வினவினேன். அத்துடன் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பொது பல சேன மீதே குற்றம் சாட்டப்படுவதற்கான காரணம் என்ன எனவும் நான் வினவினேன். முஸ்லீம்களுக்குச் சொந்தமான புடைவை வர்த்தக நிலையத் தொடரான Fashion Bug மீதான தாக்குதலுக்கு தாம் பொறுப்பாளி அல்ல என அவர்கள் கூறினார்கள். 

முஸ்லீம்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பற்றிக் கூறியபோது ஞானசாரா மிகவும் கோபங் கொண்டார். "இவர்கள் தொடர்பாக எம்முடன் கதைக்க வேண்டாம். எந்தவொரு முஸ்லீம்களும் கூடாதவர்கள் தான். அவர்கள் இங்கு நிலவும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என ஞானசாரா கூறினார். "எல்லா முஸ்லீம்களுமா?" என நான் அவரிடம் கேட்டேன். "ஆம். எல்லா முஸ்லீம்களும் தான். முஸ்லீம்களின் தீவிரவாதத்தை ஒழிக்க நான் விரும்புகிறேன். அவர்கள் எமது கலாசாரத்தை அழிக்கக் கூடாது. பௌத்தர்கள் மிகவும் அமைதியானவர்கள்" என ஞானசாரா கூறினார். 

தம்மைச் சூழ பல்வேறு கலாசாரப் பிரச்சினைகள் நிலவுகின்ற போதிலும் சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள் மிகவும் சகிப்புத் தன்மையுடன் வாழ்வதாக விதனேஜ் தெரிவித்தார். "முஸ்லீம்கள் மிகவும் அமைதியாக வாழ்கிறார்கள். முஸ்லீம்களுக்கு இங்கு எல்லா வசதிகளும் உள்ளன. கொழும்பு மேயர் ஒரு முஸ்லீம் ஆவார்" என விதனேஜ் தெரிவித்தார். "உங்களது நாட்டில் முஸ்லீம் ஒருவர் மேயராக இருப்பதற்கு நீங்கள் அனுமதிப்பீர்களா?" என அவர் என்னிடம் வினவினார். 

"ஆம். அவுஸ்திரேலியாவில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம்கள் சிலர் உள்ளனர்" என நான் பதிலளித்தேன். "இந்த மாகாணத்தின் ஆளுநர் ஒரு முஸ்லீம் ஆவார். இதனால் முஸ்லீம்கள் இங்கு அமைதியாக வாழ முடியாது என நீங்கள் கூறமுடியாது" என விதனேஸ் என்னிடம் கூறினார். 

பொதுபல சேனவின் பொதுச் செயலர் ஞானசாரா, ஒரு சில நிமிடங்களின் முன்னர் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரும் கூடாதவர்கள் எனக் கூறியதாலேயே நான் இவ்வாறு கூறவேண்டியேற்பட்டதாக விதனேஜ்ஜிடம் தெரிவித்தேன். இந்துக்கள், கத்தோலிக்கர்கள், வெளிநாட்டவர்கள் தொடர்பாகவும் இவர்களுடன் பொதுபல சேன ஏதாவது பிரச்சினையைக் கொண்டுள்ளதா எனவும் நான் கேட்டேன். 

"நாங்கள் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் அடிப்படைவாதிகள் போன்றவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமே" என அவர் பதிலளித்தார். "பௌத்த அடிப்படைவாதிகள் இல்லையா?" என நான் கேட்டேன். "எங்கே?" என ஞானசாரா என்னிடம் கேட்டார். "இங்கேயும் இருக்கலாம்" என நான் பதிலளித்தேன். பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரபலமான பல்வேறு சிறிலங்கர்கள் மத சார் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு எடுத்துவரும் நடுநிலையான பல்வேறு நகர்வுகள் தொடர்பாக நான் எடுத்துக் கூறினேன். 

குறிப்பாக இராஜதந்திரியும், கல்விமானுமான டயான் ஜெயதிலக மற்றும் அரசியல்வாதியான மிலிந்த மொறகொட போன்றவர்கள் 'கலால்' உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக எடுத்த முயற்சிகள் தொடர்பாக நான் விளக்கினேன். டயான் ஜெயதிலக மற்றும் மொறகொட ஆகிய இருவரும் பொது பல சேனவின் தீவிரவாதம் தொடர்பாக வெளிப்படையாகப் பேசினார்கள். 

"அவர்கள் முட்டாள்கள். அவர்கள் பௌத்தத்தை எதிராகப் பேசுகின்றவர்களிடமிருந்தும், கத்தோலிக்கர்கள் மற்றும் ஏனையவர்களிடமிருந்து நிதியைப் பெறுகின்றனர்" என ஞானசாரா கூறினார். இராஜதந்திரியும், சிறிலங்காவின் ஐ.நாவுக்கான முன்னாள் தூதருமான ஜெயதிலக மற்றும் முன்னாள் அமைச்சருமான மொறகொட ஆகியோர் முட்டாள்களா? என நான் குறுக்குக் கேள்வி கேட்டேன். 

"ஆம். அவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. நீங்கள் அவர்களுடைய குடும்பப் பின்னணியைப் பார்க்க வேண்டும். அவர்கள் பௌத்தர்களா? பௌத்த கலாசாரத்தை அழிப்பதற்காக தேவாலயங்களால் சில குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜெயதிலகவின் பின்னணி பௌத்தரல்ல. மிலிந்தவும் பௌத்தரல்லர்" என ஞானசாரா குறிப்பிட்டார். 

அதிபர் ராஜபக்ச ஒரு நல்ல பௌத்தனா? என நான் ஞானசாராவிடம் கேட்டேன். இதேபோன்று அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச தொடர்பாகவும் கேட்டேன். அப்போது அவரது கோபம் திடீரென நின்றிருந்தது. "ஆம். அதிபர் ராஜபக்சவின் மனைவி கத்தோலிக்கர். இல்லையா?" என ஞானசாரா கூறினார். 

நான் அவ்வாறு தான் நினைக்கிறேன். இதனால் ஏதாவது பிரச்சினையா? என நான் கேட்டேன். "இல்லை. எந்தவொரு பிரச்சினையும் இல்லை" என அவர் பதிலளித்தார். 
"நாங்கள் ஏழை மக்கள் என்பதாலேயே மேற்குலக மற்றும் ஏனைய வெளிநாட்டு ஊடகங்கள் என்பன எம்மீது ஊடகப் போரை மேற்கொள்ள விரும்புகின்றன. நாங்கள் அனைத்துலக அழுத்தங்களால் அச்சுறுத்தப்படும் மிகச் சிறிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது வெளிநாட்டு ஊடகங்களாகிய உங்களிடம் பணம் உள்ளது. அதனால் நீங்கள் எமது நாட்டுக்குப் பயணம் செய்ய முடிகிறது. நாங்களும் உங்களது நாட்டுக்கு வந்து உங்களது பிரதமருடன் நேர்காணல் மேற்கொள்ள விரும்புகிறோம். ஆனால் எம்மிடம் பணம் இல்லை. ஆனால் உங்களிடம் போதியளவு பணம் உள்ளது" என ஞானசாரா சிங்கள மொழியில் கூறியதை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றிய போது விதனேஜ் கூறினார். 

"பௌத்தத்தை அழிப்பதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை அனைத்துலக ஊடகம் கொண்டுள்ளது. அத்துடன் பௌத்தர்கள் எவ்வளவு தீவிரவாதிகள் என்பதை உலகிற்கு காண்பிக்க இந்த ஊடகங்கள் முயல்கின்றன. ஆனால் அவுஸ்திரேலியாவில் உங்களது பிரதமர் தீவிரவாதக் கருத்துக்களைக் கூறினாலும் கூட இது தொடர்பாக எவரும் கதைக்க மாட்டார்கள். தயவு செய்து எங்களுக்கு பணம் தாருங்கள், அதன் மூலம் நாங்கள் உங்களது பிரதமர் என்ன கூறுகிறார் என்பதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவோம். நாங்கள் வெளிநாட்டு ஊடகங்களிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. உங்களில் பெரும்பாலானவர்கள் மறைமுகமான நிகழ்ச்சி நிரலுடன் வருகிறீர்கள். பொது பல சேன தொடர்பாக பொய்யான பரப்புரைகள் உலகெங்கும் பரப்பப்படுகின்றன" என ஞானசாரா கூறினார். 

பொது பல சேனவின் தலைவர்களைக் குழப்பும் விதமாக மிக அண்மையில் சீன அரச செய்தி நிறுவனமான Xinhua செய்தி வெளியிட்டிருந்தது. 2005லிருந்து ராஜபக்ச அரசாங்கத்திற்கு சீனாவானது பல்வேறு நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி வருகிறது. சிறிலங்கா அதிபரின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் பல்வேறு கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்வதற்கும், தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கான இராணுவ உதவிகளையும் சீனா வழங்கியிருந்தது. 
ஆனால் யூலை 08ல், சிறிலங்காவில் உள்ள முஸ்லீம்கள் தமது முகங்களை மூடிய உடைகளை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியதாக சீனச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. 

சீனர்களின் கருத்துப் பிழையானது. சிறிலங்காவில் முஸ்லீம்கள் தமது முகங்களை மூடி உடையணியக் கூடாது எனத் தாம் குறிப்பிடவில்லை எனவும், தமது முகங்களை மூடி உடையணியும் எவருக்கும் தடைவிதிக்க வேண்டுமென்றே தாம் கோரியதாக பொதுபல சேனவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விதனேஜ் தெரிவித்தார். "இங்கு இவ்வாறான ஒரு முறைமை தேவையில்லை" என அவர் வலியுறுத்தினார். 

"நாங்கள் ஒருபோதும் இஸ்லாம் மதத்தைக் கேலிப்படுத்தவில்லை. முகமூடி அணிவது சிறிலங்காவில் தடைசெய்யப்பட வேண்டும் என்றே கூறியிருந்தோம்" என அவர் மீள வலியுறுத்தினார். 

பொது பல சேன ஏன் அடிக்கடி இந்திய உயர் ஆணையகத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதாக நான் கேட்டேன். "இந்தியா பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என விதனேஜ் பதிலளித்தார். "இந்தியா என்ன செய்யவில்லை?" எனக் கேட்டேன். 

இந்திய மாநிலமான பீகாரில் உள்ள புத்தகாயாவில் யூலை 07 அன்று குண்டுவெடிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் தீவிரவாதிகளும், இந்துத் தீவிரவாதிகளும் 'மாவோயிஸ்ட்' இராணுவக் குழுவுமே காரணம் என தென்னாசிய அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தினர். 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் புலிகளின் ஆதரவாளர்களே இதற்குக் காரணம் என சிறிலங்காவின் பிரதமர் அறிவித்திருந்தார். "புத்தகாயா என்பது புத்த பெருமான் பிறந்த இடமாகும். இது பாதுகாக்கப்பட வேண்டும்" என விதனேஸ் கூறினார். 

பௌத்தர்களின் உண்மையான பாதுகாவலன் எனத் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் பொது பல சேனவுக்கு புத்தரின் பிறப்பிடம் புத்தகாயா இல்லை என்பது தெரியவில்லை. புத்தர் தற்போது நேபாளம் எனக் கூறப்படும் நாட்டிலேயே பிறந்ததாக பௌத்தர்களின் ஒருசாரார் கூறுகின்றனர். இந்தியா மற்றும் நேபாளத்தின் பல்வேறு இடங்களைப் புத்தர் பிறந்த இடமாக மதசார் தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பீகாரில் இவர் பிறந்ததாகக் குறிப்பிடவில்லை. 

புத்தர் முத்திநிலை அடைந்த இடமே புத்தகாயா என பௌத்தர்கள் நம்புகின்றனர். பீகாரின் புத்தகாய எனும் புனித இடத்தில் பௌத்தம் தோன்றியது எனக் கருதப்படலாம். ஆனால் இது தொடர்பில் பொது பல சேன வேறுவகையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையகம் முன்பாக ஏன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதாக நான் கேட்ட வினாவை நியாயப்படுத்துவதற்காகவே விதனேஜ் இவ்வாறான ஒரு விளக்கத்தை வழங்கியிருந்தார். 

சிறிலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்கள் பேசுகின்ற சிங்கள மெரிஜ உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது போல், இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்கள் பேசுகின்ற தமிழ் மொழியானது உத்தியோகபூர்வ மொழியாக பிரகடனப்படுத்தப்படுமா என நான் விதனேஜ்ஜிடம் வினவினேன். பிரித்தானியாவிடமிருந்து சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், 1956ல் சிங்களம் மட்டும் சட்டம் வரையப்பட்டது. இதன் மூலம் சிறிலங்காவின் சனத்தொகையில் 25 சதவீதமான தமிழ் மொழி பேசும் மக்களின் மொழி உரிமை மறுக்கப்பட்டது. இதுவே பின்னர் தமிழர் வாழும் வடக்கில் நீண்ட கால யுத்தம் ஒன்று தொடரப்படுவதற்குக் காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது. 

போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர், மீண்டும் இந்த மொழிப் பிரச்சினை தலைதூக்கியது. ராஜபக்ச அரசாங்கத்தால் நீர்த்துப் போகச் செய்வதற்கு முயற்சி எடுக்கப்படும் 13வது திருத்தச் சட்டத்தில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"நீங்கள் வரலாற்றை விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இது போன்ற கேள்வியை நீங்கள் கேட்கமுடியாது. நாங்கள் தமிழ் மக்களுடன் எந்தப் பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை. அடுத்த மாதம் தமிழர் பகுதியில் நாங்கள் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். நாங்கள் அங்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகின்றனர். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களைக் கொல்லவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளையே கொன்றோம்" என விதனேஸ் கூறினார். இங்கு விதனேஜ் 'நாங்கள்' என வலியுறுத்திக் கூறியது என்பதை நான் கவனித்தேன். 

இந்தப் பிக்குகள் எம்முடனான நேர்காணலை முடித்தனர். நானும் புறப்படுவதற்குத் தயாரானேன். ஞானசாரா, விதனேஜ்ஜைக் கூப்பிட்டு சிங்களத்தில் மிகச் சுருக்கமாக அறிவித்தல் ஒன்றை வழங்கியதை நான் அவதானித்தேன். "ஞானசாரா, எல்லா முஸ்லீம்களும் கெட்டவர்கள் நகைச்சுவையாகவே கூறினார். நாங்கள் முஸ்லீம்களை எவ்விதத்திலும் வெறுக்கவில்லை" என விதனேஜ் கூறினார். 

சிறிலங்காவானது தன்னை 'சொர்க்கபுரி' எனக் கூறிக்கொள்வதற்கு இன்னமும் நீண்ட பயணம் செல்ல வேண்டும்.

No comments:

Post Top Ad