13ஐ ஆதரிக்கும் மு.கா.வின் பிரேரணையை அடுத்த அமர்வில் விவாதத்திற்கு எடுக்க முடிவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 28, 2013

13ஐ ஆதரிக்கும் மு.கா.வின் பிரேரணையை அடுத்த அமர்வில் விவாதத்திற்கு எடுக்க முடிவு


13ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரேரணை செப்டெம்பர் 24ஆம் திகதி நடைபெறும் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை மாகாண சபை தவிசாளர் ஆரியவதி கலப்பதி நேற்று செவ்வாய்க்கிழமை அவையில் மேற்கொண்டார்.


13ஆவது திருத்தம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபையில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை விவாதத்திற்கு எடுக்குமாறு அக்கட்சியின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது; கோரிக்கைவிடுத்தார்.

அத்துடன் கடந்த அமர்வுக்கு அவசர பிரேரணையாகவும் இம்மாத அமர்வுக்காகாக கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாகவே சாதாரண பிரேரணையாக தான் சமர்ப்பித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தான் சமர்ப்பித்த பிரேரணையை இன்றைய நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமைக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்ததுடன்; கட்டாயம் விவாதத்திற்கு எடுத்தாக வேண்டும் நேற்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

அங்கு இது தொடர்பாக கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்ற போதிலும் சபை அமர்வுக்கு நேரமானதால் இடைவேளையின் போது ஆளும் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆராய்வோம்  எனக் கூறி தவிசாளரினால் அக்கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பாக ஏ.எம்.ஜெமீல் காரசாரமான கருத்துகளை தெரிவித்து பிரேரணையை விவாதத்திற்கு எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.  இதன்போது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய உறுப்பினர்கள் ஐவரும்  ஜெமீலிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

13ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதால் நமது சபையில் இதனை அவசரமாக விவாதத்திற்கு எடுக்க வேண்டிய தேவை இல்லை என கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி பதிலளித்தார்.

எனினும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு இணங்காமல் தொடர்ந்தும் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்த போது சபை அமர்வை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்து தவிசாளர் இக்கூட்டத்தை மீண்டும் முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்த சபை அமர்வு மீண்டும் ஆரம்பமானபோது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், 13ஆவது திருத்த சட்டம் தொடர்பான பிரேரணையை இன்றைய நிகழ்ச்சி நிரலில் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பதிலளித்த தவிசாளர் ஆரியவதி கலப்பதி, குறித்த பிரேரணையை செப்டெம்பர் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த மாத அமர்வில் இடம்பெறும் என அறிவித்தார்.

No comments:

Post Top Ad